பிரசவத்தின் போது கர்ப்பிணி திடீர் சாவு
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி திடீரென இறந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஓசூர்
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி திடீரென இறந்தார். இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கர்ப்பிணி சாவு
கர்நாடக மாநிலம் மாலூர் தாலுகா பெனிகட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (வயது23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் ஓசூர் அருகேயுள்ள கூஸ்தனப்பள்ளி கிராமத்தில் பெற்றோர் வீட்டில் இருந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தார். அப்போது டாக்டர்கள் அவருக்கு டிசம்பர் 22-ந் தேதி குழந்தை பிறக்கும் என தேதி கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அஸ்வினி உடல் நல பாதிப்பு காரணமாக ஓசூர் அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கலாம் எனக்கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது அஸ்வினிக்கு டாக்டர்கள் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய அவர் திடீரென சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தையை காப்பாற்றினர்
இதையடுத்து அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரோடு இருந்ததால் டாக்டர்கள் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்து ஆண் குழந்தையை உயிரோடு காப்பாற்றினர். இதனையடுத்து அந்த பச்சிளம் குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அஸ்வினியின் சாவுக்கு டாக்டர்களின் தவறான சிகிச்சையே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறினர்.
இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் போலீசில் டாக்டர்கள் மீது புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் மற்றும் சுகாதார துணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணி இறந்தது குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.