தண்ணீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை சாவு


தண்ணீர் தொட்டியில் விழுந்து 1½ வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கல்லாவி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை இறந்தது.

கிருஷ்ணகிரி

கல்லாவி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 1½ வயது குழந்தை இறந்தது.

திடீர் மாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள சோலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி மாதம்மாள். அன்பு திருப்பூரில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மாதம்மாள் ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் சிவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை உறவினர் சண்முகம் குடும்பத்தினர் கவனித்து வந்தனர். நேற்று காலை மாதம்மாள் குழந்தையை சுப்பிரமணி வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். குழந்தை சிவஸ்ரீ அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை திடீரென மாயமானது. இதனால் சண்முகம் குடும்பத்தினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடினர்.

குழந்தை சாவு

அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு கல்லாவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுதொடர்பாக கல்லாவி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story