மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் சாவு
வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
மாடு முட்டியது
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு கிராமங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வி.மாதேப்பள்ளி கிராமத்தில் அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவை சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த எருது விடும் விழாவை நாடுவனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பவன்குமார் (வயது 11) வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது சீறிப்பாய்ந்து வந்த மாடு பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து சிறுவன் பவன்குமாரை முட்டி தள்ளியது. இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
மாணவன் சாவு
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவன் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை பவன்குமார் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மாணவன் வேப்பனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.எருது விடும் விழாவில் மாடு முட்டி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.