மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 9 மாத குழந்தை சாவு
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே 9 மாத ஆண் குழந்தை இறந்தது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெற்றோர் கண் முன்னே 9 மாத ஆண் குழந்தை இறந்தது.
லாரி மோதியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முரளி. (வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வேழ்வி (22). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கணவன்-மனைவி 2 பேரும் குழந்தையை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். ஊத்தங்கரை அருகே ஜண்டாமேடு பகுதியில் சென்றபோது ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வெங்காயம் பாரம் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
குழந்தை சாவு
இந்த விபத்தில் 9 மாத குழந்தை சித்தார்த் பெற்றோர் கண் முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. முரளி, வேழ்வி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.