ராணுவ வீரர் பரிதாப சாவு


ராணுவ வீரர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மேலும் 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

நாகரசம்பட்டி அருகே இருதரப்பினர் மோதலில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மேலும் 3 பேரை கைது செய்தனர்.

ராணுவ வீரர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 31). இதே ஊரை சேர்ந்தவர் சின்னசாமி (55). இவர் நாகோஜஅள்ளி பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். பிரபாகரனும், அவரது சகோதரர் பிரபு (28) என்பவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பொது குடிநீர் தொட்டி அருகில் பிரபாகரன் துணி துவைத்தது குறித்து அங்கு வந்த கவுன்சிலர் சின்னசாமி கேட்டுள்ளார். பின்னர் அன்று மாலை சின்னசாமி மற்றும் அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30) ஆகியோர் பிரபாகரன் வீட்டுக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மோதல்- கைது

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த சின்னசாமி தரப்பினர் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், கவுன்சிலர் சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் (30), மற்றும் மணிகண்டன் (32), மாதையன் (60), புலிபாண்டி (24), வேடியப்பன் (55), காளியப்பன் (40) ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன், மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர் சாவு

இவர்களில் குருசூர்யமூர்த்தி சென்னை மாநகரில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். குணாநிதி கல்லூரி மாணவர் ஆவார். இதனிடையே படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன், புலிபாண்டி, ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இருதரப்பினர் மோதலில் ராணுவ வீரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story