பஸ்சை பழுதுபார்த்துக் கொண்டிருந்தடிரைவர், கண்டக்டர் உடல் நசுங்கி பலி


பஸ்சை பழுதுபார்த்துக் கொண்டிருந்தடிரைவர், கண்டக்டர் உடல் நசுங்கி பலி
x
திருப்பூர்


தாராபுரம் அருகே பழுதான அரசு பஸ்சுக்கு உதவி செய்வதற்காக வந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மீட்பு வாகனத்தின் மீது மற்றொரு அரசு பஸ் மோதியது. இதில் பஸ்சை பழுதுபார்த்துக் கொண்டிருந்த டிரைவர், கண்டக்டர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

இந்த கோர விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசு பஸ்

திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு அரசு பஸ் தேனி மாவட்டம் போடி நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை தேனி மீனாட்சிபுரத்தை சேர்ந்த டிரைவர் பால்கண்ணன் ஓட்டிச்சென்றார்.

இதில் போடி அம்மாபட்டியை சேர்ந்த முருகன் என்பவர் கண்டக்டராக இருந்தார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.

திடீர் பழுது

இந்த பஸ் தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் சாலக்கடை என்ற பகுதியில் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தது அப்போது திடீரென பஸ்சின் முன் பக்க சக்கரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் பஸ்சை டிரைவர் சாலை ஓரத்தில் நிறுத்தினார்.

பின்னர் டிரைவர், கண்டக்டர் இருவரும் இறங்கி பழுதான பஸ்சை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதன் காரணமாக பஸ்சில் இருந்த பயணிகள் அந்த வழியாக வந்த மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துைற மீட்பு வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டது.

அதன் பேரில் அந்த வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து அரசு பஸ்சின் பின்பகுதியில் சிவப்பு விளக்கை எரிய விட்டபடி தடுப்பு அமைத்து மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறு இல்லாமல் நின்று கொண்டிருந்தது.

2 பேர் பலி

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதில் திருமூர்த்தி என்பவர் நடத்துனராக இருந்தார்.

இந்த பஸ் சம்பவ இடத்தின் அருகே வேகமாக வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை மீட்பு வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த மீட்பு வாகனம் டயரை பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது மோதியது. இதில் அந்த பஸ்சின் முன்பகுதி சக்கரத்தை கழட்டி கொண்டு இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டரான பால்கண்ணன் மற்றும் முருகன் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்தில் செங்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த பஸ் பயணிகள் வேறு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக 2 அரசு பஸ்கள், நெடுஞ்சாலைத்துறை வாகனம் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ்கள், நெடுஞ்சாலைத்துறை மீட்பு வாகனம் மோதிய விபத்தில் டிரைவர், கண்டக்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story