தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயர் ரெயிலில் அடிபட்டு பலி


தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயர் ரெயிலில் அடிபட்டு பலி
x

வாழப்பாடி அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயர் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

சேலம்

வாழப்பாடி

வாழப்பாடி அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயர் ரெயிலில் அடிபட்டு இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

என்ஜினீயர்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சிங்கபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மகன் காங்கேயத்தான் (வயது 22). பி.இ. என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

என்ஜினீயரான காங்கேயத்தான், தனது உறவினர் சபரி (27) மற்றும் நண்பர்களான சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் நேற்று மதியம் வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதிக்கு சென்றார். அங்கு ரெயில் தண்டவாளம் அருகே அமர்ந்து அவர்கள் பேசி கொண்டு இருந்தனர்.

ரெயிலில் அடிபட்டு பலி

அப்போது காங்கேயத்தான் செல்போனில் பேசிவிட்டு வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். இதனிடையே விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில் அந்த வழியாக வந்தது.

ரெயில் வருவதை கவனிக்காமல் அவர் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதைக்கண்ட அவருடைய உறவினர் சபரி, தண்டவாளத்தில் நின்ற காங்கேயத்தானை ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ரெயிலில் அடிபட்டு காங்கேயத்தான், சபரி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே காங்கேயத்தான் துடிதுடித்து இறந்து போனார். அவரை காப்பாற்ற முயன்ற வாலிபர் சபரி படுகாயத்துடன், சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்குப்பதிவு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் ரெயில்வே போலீசார் காங்கேயத்தானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழப்பாடி அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில் நடந்து சென்ற என்ஜினீயர் ரெயிலில் அடிபட்டு இறந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story