லாரி-கார் மோதல்; டிரைவர் சாவு
ஆத்தூர் அருகே லாரி-கார் மோதல்; டிரைவர் இறந்தார்.
ஆத்தூர்
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 58), சூரப்பேட்டையை சேர்ந்தவர் கிருபாகரன்(47) திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் டெல்லி (57), கண்ணகி தெருவை சேர்ந்தவர் கேசவன் (52). இவர்கள் சென்னை மாநகர அரசு பஸ் டிரைவர்கள். இவர்கள் 4 பேரும் கோவைக்கு சென்று விட்டு நேற்று மாலை சென்னைக்கு காரில் ஆத்தூர் வழியாக வந்து கொண்டு இருந்தனர். காரை கேசவன் ஓட்டி வந்தார்.
ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம் செல்லியம்பாளையம் இடையிலான புறவழிச்சாலையில் சென்றபோது சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முனுசாமி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிருபாகரன், டெல்லி, கேசவன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.