விபத்தில் வடமாநில டிரைவர் பலி
சூளகிரி:
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்கிஷன் (வயது 33). கன்டெய்னர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர் லாரியை ஓட்டிக் கொண்டு சாமல்பள்ளம் பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ராம்கிஷன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிளீனர் நனாசந்த் (33) படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராம்கிஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.