கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் வாகனம் மோதி பலி
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி புள்ளிமான் பலியானது.
புள்ளிமான் பலி
கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளி காப்புக்காடு உள்ளது. இங்கிருந்து புள்ளிமான் ஒன்று நேற்று காலை ஊருக்குள் வந்தது. கிருஷ்ணகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் அந்த புள்ளிமான் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று புள்ளிமான் மீது மோதியது. இந்த விபத்தில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் ரவி, வனக்காப்பாளர் ஜோதி விக்னேஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து போனது பெண் புள்ளி மான் என்பதும், அதற்கு 2½ வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் விசாரணை
இதை தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை அரசு மருத்துவர் அன்பு தலைமையிலான மருத்துவ குழுவினர் மானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதன் பிறகு மானின் உடலை வனத்துறையினர் புதைத்தனர். இறந்து போன புள்ளி மான் வரட்டனப்பள்ளி காப்புக்காட்டில் இருந்து தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வந்ததில் வாகனம் மோதி இறந்ததா? அல்லது வழி தெரியாமல் ஊருக்குள் வந்து விபத்தில் சிக்கி இறந்ததா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.