போலீஸ் காவல் மரணம்; 48 அதிகாரிகள் மீது நடவடிக்கை-டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக 18 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், போலீஸ் நிலைய மரணங்கள் தொடர்பாக 48 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக 18 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், போலீஸ் நிலைய மரணங்கள் தொடர்பாக 48 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கருத்தரங்கு
தமிழக போலீஸ் நிலையங்களில் ஏற்படும் கைதிகள் மரணங்களை தடுத்து, போலீஸ் நிலையங்களில் மரணங்கள் இல்லாத நிலையை உறுதி செய்யும் விதமாக போலீசாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாவட்டம் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.
மதுரையில் இதற்கான கருத்தரங்கு தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் நேற்று காலை நடந்தது. நீதிபதி ரவி, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், சூப்பிரண்டு சிவபிரசாத், வக்கீல் காந்தி மற்றும் தென் தமிழகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
48 போலீஸ் அதிகாரிகள்
கருத்தரங்கில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-
போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, யாரும் உயிர் இழக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் போலீஸ் நிலையங்களில் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 மரணங்கள் நடந்துள்ளன. இதில் 2018-ல் அதிகமாக 18 மரணங்களும், 2021-ல் 4 பேரும், 2022-ல் 2 பேரும் போலீஸ் நிலையங்களில் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் 12 வழக்குகளில் மட்டுமே போலீசாரின் தவறு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்ற 68 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் உடல்நலக்குறைவு, தற்கொலையாலும் உயிரிழந்துள்ளனர். நோய் காரணமாக உயிரிழந்தாலும் பொதுவாக போலீசார் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக 48 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
கடமை உணர்வு
தமிழக போலீஸ் துறைக்கு பாரம்பரியம், பல்வேறு சிறப்பு உள்ளது. யாரையும் தேவையில்லாமல் துன்புறுத்த மாட்டோம். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் சட்டத்தின் பார்வையில்தான் உள்ளது. எனவே மனசாட்சியுடன், கடமை உணர்வோடு இந்த வேலையை செய்து வருகிறோம். குற்றவாளிகளை பிடிக்கும் போது கண்காணிப்பு கேமரா, கைரேகை உள்ளிட்ட ஆவணங்கள் மூலம்தான் அதனை உறுதி செய்கிறோம். சில நேரங்களில் அவர்கள் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று கூறும் போது அவர்களிடம் எப்படியாவது உண்மையை பெற்று விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை. உண்மையை கண்டுபிடிப்பதற்கு எவ்வளவோ வசதி வந்துவிட்டது.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பாக்கியால் சுடும் அதிகாரம் வரை உள்ளது. அதற்காக நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி விடக்கூடாது. நமது கடமையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். போலீஸ் துறை, நீதித்துறை போன்றவை ஆதாரத்தின் அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன. சந்தேகத்தின் பெயரில் நாம் அவசரப்பட்டு எவ்வித முடிவுக்கும் வந்துவிடக்கூடாது. உங்களுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கடன் வழங்கும் செயலிகள்
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறும்போது, "தமிழகம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக 18 ஆயிரம் பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளன. அவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 2,300 பேரின் வங்கிக்கணக்குகள், சொத்துக்களை முடக்கியுள்ளோம். இந்த விஷயத்தில் தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். தற்போது பொதுமக்கள் கடன் வழங்கும் செயலிகள் மூலம் ஏமாற்றப்படுகின்றனர். அதில் பணம் பெற்றவர்கள் திரும்ப செலுத்த முடியாவிட்டால் அவர்களை பல்வேறு வகையில் தொந்தரவு செய்கிறார்கள். இதனால் சிலர் தற்கொலை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே இதுபோன்ற எந்த கடனையும் பொதுமக்கள் வாங்க வேண்டாம். பணம் இரட்டிப்பு, ஒரு லட்சத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி தருவதாக பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. எனவே பொதுமக்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்கக்கூடாது. கந்துவட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.