பேண்டு வாத்திய கலைஞர் சாவில் திருப்பம்


பேண்டு வாத்திய கலைஞர் சாவில் திருப்பம்
x

திண்டுக்கல்லில், பேண்டு வாத்திய கலைஞர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. லாரி மோதி அவர் பலியானது விசாரணையில் தெரியவந்தது.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரத்தை அடுத்த கொத்தப்புளியை சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 25). பேண்டு வாத்திய கலைஞர். இவருடைய மனைவி ஆனந்தி. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆனந்தி கோபித்து கொண்டு திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதையடுத்து மனைவியை அழைத்து செல்வதற்காக கடந்த 5-ந்தேதி இரவு கார்த்திக்குமார் திண்டுக்கல்லுக்கு வந்தார். ஆனால் அன்றைய தினம் இரவு திண்டுக்கல் பழைய லாரி பேட்டையில் அவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மர்ம நபர்களால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் சம்பவத்தன்று இரவு லாரி பேட்டையில் இருந்து ஒரு லாரி வெளியே செல்வது மட்டுமே கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை துருப்புசீட்டாக வைத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.

அதில் லாரி மோதியதில் கார்த்திக்குமார் இறந்தது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் கூறுகையில், மனைவியை அழைத்து செல்ல வந்த கார்த்திக்குமார் இரவு பழைய லாரிபேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது பின்னோக்கி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி இறந்துள்ளார். இதுதொடர்பாக மதுரை அனுப்பானடியை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியை (26) கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story