நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சாவு-கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி சாவு-கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x

நங்கவள்ளி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

மேச்சேரி:

நங்கவள்ளி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார். இதனால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விவசாயி

நங்கவள்ளி அருகே சின்னசோரகை மலையன்வளவு பகுதியை சேர்ந்தவர் பொன்னுவேல் (வயது 55). விவசாயி. இவர் நங்கவள்ளி ஒன்றிய முன்னாள் கவுன்சிலராகவும், தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளராகவும் இருந்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3-ந் தேதி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் பெருமாள், அவரது மனைவி நாகம்மாள், மகன் பார்த்திபன் ஆகிய 3 பேரும் கல் மட்டும் இரும்பு கம்பியால் பொன்னுவேைல சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சாவு

பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பொன்னுவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நங்கவள்ளி போலீசார் ஏற்கனவே பெருமாள், நாகம்மாள், பார்த்திபன் ஆகிய 3 பேர் மீது அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பொன்னுவேல் இறந்ததால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலத்தகராறில் தாக்கப்பட்ட விவசாயி 2 மாதத்துக்கு பின்னர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story