கடையம் அருகே 3 பேரை தாக்கிய கரடி உயிரிழப்பு - நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தகவல்
நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட கரடி களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.
களக்காடு,
கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு வழியாக நேற்று முன்தினம் அதிகாலை சென்ற வியாபாரி வைகுண்டமணி (வயது 58) என்பவரை ஒற்றை கரடி கடித்து குதறியது. அவரை காப்பாற்றுவதற்காக சென்ற அதே பகுதியை சேர்ந்த சகோதரர்களான நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவமனையில் முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பொதுமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால், 3 பேரை கடித்து குதறிய கரடியை நேற்று முன்தினம் இரவு வனத்துறை அதிகாரிகள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பின்னர் அதனை முண்டந்துறை பகுதியில் வனத்தில் விடுவதற்காக முடிவு செய்தனர். ஆனால் அங்கு காணி இன மக்கள் வசித்து வருவதால், அங்கிருந்து கரடியை களக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட செங்கல்தேரி காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். கரடிக்கு மயக்கம் தெளிந்த பின்னர் அங்கு காட்டுப்பகுதியில் விட்டதாகவும், அப்போது கரடி துள்ளிக்குதித்து போனதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5 மணி அளவில் வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனத்துறையினர் விட்ட இடத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கரடி இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். கரடியின் திடீர் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதிகமான நுரையீரல் பாதிப்பு காரணமாக கரடி இறந்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.