பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரம்: தனக்கு தொடர்பு இல்லை என அ.தி.மு.க. எம்.பி. சார்பில் விளக்கம்
பெரியகுளம் அருகே சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்ைல என அ.தி.மு.க. எம்.பி. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சிறுத்தை சாவு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் விவசாய தோட்டத்து வேலியில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி ஒரு சிறுத்தை சிக்கி உயிருக்கு போராடியது. அந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டபோது உதவி வன பாதுகாவலர் மகேந்திரனை அந்த சிறுத்தை தாக்கியது. பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியது.
அதற்கு மறுநாள் (28-ந்தேதி) அதே தோட்டத்து வேலியில் வைத்த சுருக்கு கம்பியில் 2 வயது ஆண் சிறுத்தை சிக்கி உயிரிழந்து கிடந்தது. விசாரணையில் அந்த தோட்டம் அமைந்துள்ள நிலம் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகனும் தேனி அ.தி.மு.க. எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகிய 3 பேரின் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அந்த நிலத்தில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்த பூதிப்புரத்தை சேர்ந்த தொழிலாளி அலெக்ஸ்பாண்டியன், ப.ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
எம்.பி. விளக்கம்
இந்த சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேனி வனத்துறை சார்பில், ப.ரவீந்திரநாத் எம்.பி. உள்பட நில உரிமையாளர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதில் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களின் தரப்பு விளக்கத்தை வனத்துறையினரிடம் அளித்தனர்.
இந்நிலையில் ப.ரவீந்திரநாத் தரப்பில் அவருடைய வக்கீல் சந்திரசேகரன் தலைமையிலான வக்கீல்கள் குழுவினர் தேனி வனச்சரகர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ப.ரவீந்திரநாத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், அவரின் சார்பில் விளக்க கடிதத்தை தாங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் கூறி வனச்சரகர் செந்தில்குமாரிடம் அவர்கள் ஒரு விளக்க கடிதத்தை கொடுத்தனர்.
பின்னர் ப.ரவீந்திரநாத் எம்.பி.யின் வக்கீல் நிருபர்களிடம் கூறுகையில், "டெல்லியில் ஜனாதிபதி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க ப.ரவீந்திரநாத் எம்.பி. டெல்லி சென்றுள்ளார். இதனால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தனது விளக்க கடிதத்தில் கூறியுள்ளார். எனவே அவரை விசாரணையில் இருந்து விடுவிக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "ப.ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறி தனது விளக்கத்தை வக்கீல்களிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அவர் விளக்க கடிதத்தில் கூறிய தகவல்களை வழக்கு விசாரணையின் ரகசியம் கருதி வெளியே கூற இயலாது. அவரின் விளக்கத்தின் பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் எம்.பி.க்கு சம்மன் அனுப்பப்படும். மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது" என்றார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த உதவி வன பாதுகாவலர் மகேந்திரன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.