தீக்குளித்த பெண் சாவு
குஜிலியம்பாறை அருகே தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் சந்தனத்துரை (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தனத்துரையின் சகோதரிகள் மற்றும் அவரது உறவினர் தங்கபாண்டி ஆகியோர் பாக்கியலட்சுமியிடம் தகராறு செய்தனர். இதனால் கோபித்து கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் கரூர் அருகே தாந்தோன்றிமலையில் உள்ள தனது அக்காள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 21-ந்தேதி மணியக்காரன்பட்டிக்கு பாக்கியலட்சுமி மீண்டும் வந்தார். அப்போது அவருடன், அவரது மாமியார் கோவிந்தம்மாள் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கடந்த 24-ந்தேதி உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதற்கிடையே அவருடைய தாய் வீரமணி குஜிலியம்பாறை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாக்கியலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக சந்தனத்துரை, கோவிந்தம்மாள் (65), அங்காளஈஸ்வரி (43), பாலாமணி (40), தங்கபாண்டியன் (45) உள்பட 7 பேர் மீது குஜிலியம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.