அண்ணன், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
வடலூரில் அண்ணன், தம்பியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடலூர்,
வடலூர் சித்தர் தெரு வள்ளலார் நகரை சேர்ந்தவர் ராஜவன்னியன் மகன் வீரன். இவரும், இவருடைய தம்பி அண்ணாமலையும் வடலூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 24-ந் தேதி மாலை இருவரும் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த இளைஞர்களை இருவரும் தட்டிக்கேட்டனர்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், இரும்பு குழாயால் இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த வீரன், அண்ணாமலை ஆகிய 2 பேரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
6 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடலூர் புதுநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கோபிநாத் என்கிற விக்னேஷ்(வயது 19), கோட்டக்கரை மாருதி நகரை சேர்ந்த ரகோத்தமன் மகன் சஞ்சய்(19) அன்னை சத்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் பிரவீன் குமார் ஆகியோரை கைது செய்து கடலூர் சிறையிலும், மேலும் 17 வயது சிறுவர்கள் 3 பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனர்.