மணல் அள்ளுவதை தடுத்தால் கொலை மிரட்டல்
சாணார்பட்டி அருகே மணல் அள்ளுவதை தடுத்தால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர்.
அதன்படி பா.ஜ.க. பிறமொழிப்பிரிவு மாவட்ட தலைவர் பட்டிவீரன் ரகு மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், ஆத்தூர் தாலுகா சித்தரேவு பகுதியில் பெரிய தர்மர் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் குளப்பகுதியில் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதேபோல் தாடிக்கொம்புவை அடுத்த நந்திகோவில்பட்டி அருகே உள்ள நந்தீஸ்வரன் கோவில் நிர்வாகி ராமசாமி தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நந்தீஸ்வரன் கோவிலுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவில் அமைந்துள்ள இடத்துக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மணல் அள்ளுவதை தடுக்க...
சாணார்பட்டியை அடுத்த புங்கம்பாடி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவில், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள டி.பஞ்சம்பட்டி புதுக்குளத்துக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால், வண்டிப்பாதை ஆகிய இடங்களில் சிலர் மணல் அள்ளுகின்றனர். அவர்களை தட்டிக்கேட்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மணல் அள்ளுவதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 297 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் காந்திநாதன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.