போலீசாருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
குலசேகரன்பட்டினத்தில் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு முத்தாரம்மன் கோவில் அருகே புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்செந்தூர் தாலுகா போலீசார் அருள்முருகன் (வயது 29), ராஜேஷ், முத்துலட்சுமி ஆகிய மூவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தன்று குலசேகரன்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் சுயம்பு முத்து (27), குலசேகரன்பட்டினம் பண்டார சிவன் பள்ளி எதிரில் வசித்து வரும் பெருமாள் மகன் ஒளி முத்து (28) ஆகியோர் வியாபாரிகளிடம் தகராறு செய்தனர்.
இதற்காக சுயம்பு முத்து, ஒளி முத்தை போலீசார் விசாரணைக்காக புறக்காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது குலசேகரன்பட்டினம் காமராஜ் நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சுயம்புலிங்கம் (27), குலசேகரன்பட்டினம் ஞானசம்பந்தன் (28) ஆகியோர் சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரை அவதூறாக பேசினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததுடன், அரசு பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயம்புலிங்கம், ஞானசம்பந்தனை ைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.