கல்வி நிலைய மரணங்கள்: போலீசாரே விசாரிக்கலாம்...சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் திருத்தம்...!
கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்கவும், கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதனால் சிபிசிஐடி போலீசாரின் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதிஷ் குமார் அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறையின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நீதிபதி, கல்வி நிலையங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம். கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். மேலும், கல்வி நிலைய மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.