வெடிகுண்டை கடித்த நாய் தலை துண்டாகி பலி-வெடிக்காத குண்டுகள் செயலிழக்க வைப்பு
வானாபுரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் போட்டு விட்டு சென்ற நாட்டு வெடிகுண்டை இரைதேடி திரிந்த நாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது. அந்த பகுதியில் கிடந்த மேலும் சில நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் போட்டு விட்டு சென்ற நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் உயிரிழந்தது. அந்த பகுதியில் கிடந்த மேலும் சில நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.
மலைப்பகுதி
வாணாபுரம் அருகே உள்ள வரகூர் பகுதியில் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் வளரும் மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இங்கு மான், முயல், காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட வனவிலங்குகள் மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகளும் அதிக அளவில் வசித்து வருகின்றன.
அவை தண்ணீர் தேடி மலைபகுதியில் இருந்து வெளியே வருகின்றன. இந்த விலங்குகளை வேட்டைக்காரர்கள் வெடிவைத்து வேட்டையாடி கொன்று அதனை இறைச்சியை விற்று வருகின்றனர்.
வரகூர் பிடாரி காளியம்மன் கோவில் முன்பகுதியில் மலைக்கு செல்லும் கால்வாய் பகுதி உள்ளது. இந்த கால்வாய் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக போட்டு சென்றுள்ளனர்.
அந்த வெடிகுண்டை அப்பகுதியில் இரை தேடி சுற்றித்திரிந்த நாய் ஒன்று கடித்ததில் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாட்டு வெடிகுண்டுகள்
சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வீசப்பட்டிருந்த நாட்டு வெடி குண்டுகளை பாதுகாப்பாக சேகரித்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று செயல் இழுக்க செய்தனர். அப்போது அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தபோது புகை மண்டலம் ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறுகையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த வெடியை பயன்படுத்துகின்றனர். வெடி தயாரிப்பவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.