வருங்காலங்களில் என்னவாக வேண்டும் என முடிவு செய்து இப்போதே தயார்படுத்த வேண்டும் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேச்சு
மாணவ- மணவிகள் வருங்காலங்களில் என்னவாக வேண்டும் என முடிவு செய்து அதற்கு இப்போதே தங்களை தயார்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
மாணவ- மணவிகள் வருங்காலங்களில் என்னவாக வேண்டும் என முடிவு செய்து அதற்கு இப்போதே தங்களை தயார்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.
கல்லூரி கனவு நிகழ்ச்சி
வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம். நான் 12-ம் வகுப்பு முடித்த பின்னர் மேற்படிப்பு முடித்துவிட்டு ஆசிரியராக வேண்டும் என்று எனது தந்தை அறிவுறுத்தினார். அதனடிப்படையில் என்னுடைய அண்ணன் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தயார்படுத்த வேண்டும்
நான் 19.12.2003 அன்று இந்திய ஆட்சிப்பணியில் சேர வேண்டுமென்று முடிவு செய்தேன். அந்த காலக்கட்டத்தில் எந்த உயர்கல்வியில் சேர வேண்டுமென்றும், அதன் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் எளிதில் கிடைக்கவில்லை. ஆனால் இப்பொழுது வலைதளங்களில் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் சம்பந்தமான தகவல்கள் எளிதில் கிடைக்கப்பெறுகின்றன. அதனால் மாணவ- மாணவியர்கள் எளிதில் அறிந்து கொண்டு உயர்கல்வி படிப்புகள் மேற்கொண்டு வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுக்க முடியும்.
தற்பொழுது உயர்கல்வியில் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. அதில் எந்த உயர்கல்வி படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பம் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படுகின்றது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு முடித்த மாணவ- மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் என்னவாக வேண்டும் என்ற முடிவை எடுக்க வேண்டும். அதற்காக இப்போது இருந்தே தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகள் உயர்கல்வி படித்து நல்ல நிலையை அடைய வேண்டும்
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் நாக சதிஷ் கிடிஜாலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) தீபாசுஜிதா, ஜெயின் கல்லூரி செயலாளர் லிக்மிச்சன் ஜெயின், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் சுதர்சன்குமார், கல்லூரி முதல்வர் இன்பவள்ளி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.