அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்க முடிவு


அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்க முடிவு
x
தினத்தந்தி 24 Aug 2023 2:15 AM IST (Updated: 24 Aug 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளை பிரித்தல், மாற்றுதல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை, இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

முதல்கட்டமாக மாவட்ட வாாியாக தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதையடுத்து வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 633 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 33 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 ஆயிரத்து 346 வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் 261 எந்திரங்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வாக்குச்சாவடிகள்

இதையடுத்து 1,500 வாக்காளர்களுக்கு மேல் கொண்ட வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது, வாக்குச்சாவடிகளை மாற்றுவதற்கு அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. அடுத்ததாக திண்டுக்கல் மாவட்ட அளவில் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்கும் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2 ஆயிரத்து 117 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் திண்டுக்கல், பழனியில் 2 வாக்குச்சாவடிகளில் 1,500-க்கு மேல் வாக்காளர்கள் உள்ளனர். எனவே அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிப்பது குறித்து கருத்து கேட்கப்படும்.

மேலும் பழுதடைந்த கட்டிடங்கள், இடிக்கப்பட்ட கட்டிடங்களில் செயல்பட்ட வாக்குச்சாவடிகளை வேறுஇடத்துக்கு மாற்றுவது குறித்தும் கருத்து கேட்கப்பட்டு, பரிந்துரைகள் அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story