ஒரே இடத்தில் 60 நகைக்கடைகளை அமைக்க முடிவு


ஒரே இடத்தில் 60 நகைக்கடைகளை அமைக்க முடிவு
x

ஒரே இடத்தில் 60 நகைக்கடைகளை அமைக்கப்படும் என்று மாநராட்சி மேயர் தெரிவித்தார்

தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் நகைக்கடை வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதற்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் கிளமெண்ட் அந்தோணிராஜ், பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தெற்குஅலங்கம், காந்திஜிசாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்களில் இருக்கக்கூடிய கடைகள் பற்றியும், இவைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நியாயமான வாடகை

அப்போது தெற்குஅலங்கத்தில் திருவள்ளுவர் திரையரங்கம் இருந்த இடத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் தரைதளத்தில் 60 கடைகளை நகை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த கடைகள் 200 சதுரஅடி, 300 சதுரஅடி, 400 சதுரஅடி பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும். கடைகளுக்கு நியாயமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என வியாபாரிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து ஆணையர் சரவணகுமார் பேசும்போது, அய்யங்கடை பகுதியில் வாகன நிறுத்தும் வசதி இல்லாமல் தனித்தனியாக நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர்களுக்கு ஒரே இடத்தில் கடைகள் அமைத்து கொடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் முதல்முறையாக ஒரே இடத்தில் 60 நகைக்கடைகள் அமைய இருக்கின்றன.

வைப்புத்தொகை

விதிமுறைகளுக்குட்பட்டு வாடகை, வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்படும். புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், குளிர்சாதன வசதி, லிப்ட் வசதி அமைக்கப்பட உள்ளன. முதல்தளத்தில் 48 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கடைகள் அமைக்கப்பட உள்ளன. பேக்கரி கடை உள்ளிட்ட வியாபாரிகள் ஒரே இடத்தில் மொத்தமாக கடைகள் வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை நாடலாம். வணிக வளாகம் கட்டுமான பணி வருகிற நவம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.






Next Story