நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு -கமல்ஹாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு -கமல்ஹாசன் பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

கோவை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோடு சின்னியம் பாளையம் திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. இதற்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. எனவே கட்சிக்கு புதிய உறுப்பினர்களாக ஒரு பூத்திற்கு 20 பேரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு தொகுதிக்கு 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க முடியும். சாதி, மதத்தை சாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்கு எதிராக எது உள்ளதோ அதை நான் சாடுவேன்.

ஜனநாயகத்திற்கு ஆபத்து

ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஒரு பிள்ளையை வளர்ப்பது போல ஜனநாயகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்த கதவு தான் என் வீடு. மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும்.

தலைமை பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. புது கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கட்சியில் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவி சாய்ப்பேன். நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது.

ராகுல்காந்தி பேச்சு

ராகுல்காந்தி இன்று (நேற்று) காலை என்னுடன் செல்போனில் பேசினார். அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பினார். அது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? கோவையில் போட்டியிடுவீர்களா?

பதில்:- அது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

ரகசியம்

கேள்வி:- கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்திற்கு செல்ல உள்ளீர்களா?

பதில்:- பெங்களூரு பிரசாரத்திற்கு செல்வது குறித்து நாளைக்குள் (இன்று) முடிவு சொல்லப்படும். எங்களது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம். முடிவெடுத்த பின்னர் சொல்லப்படும்.

கேள்வி:- சட்டமன்றத்தில் தவறவிட்ட வெற்றியை, நாடாளுமன்றத்தில் பெற திட்டமா?

பதில்:- இருக்கலாம். அது நல்ல எண்ணம்தானே. வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story