கோவையில் 2 வார்டுகளில் 119 பொதுகுடிநீர் குழாய்களை துண்டிக்க முடிவு
கோவை மாநகராட்சியில் 77 மற்றும் 78-வது வார்டுகளில் உள்ள 119 பொதுகுழாய்களை துண்டிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சியில் 77 மற்றும் 78-வது வார்டுகளில் உள்ள 119 பொதுகுழாய்களை துண்டிக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சி கூட்டம்
கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் விக்டோரியா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், துணை கமிஷனர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-
கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி:- கோவை மாநகராட்சி வார்டுகளுக்கான செலவு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. கிழக்கு மண்டல பகுதிகளில் அடிப்படை வசதி பணிகளை மேம்படுத்தி கொடுக்க அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும்.
அதிகாரிகள் மெத்தனப்போக்கு
சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன்:- 80-வது வார்டு பகுதியில் தெருநாய் தொல்லை அதிகளவில் உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் பேசிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்துகொள்ளாமல், துரிதமாக செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. பொதுமக்களை நாங்கள்தான் சந்திக்க வேண்டும். கோவை மாநகராட்சியில் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
நிதிக்குழு தலைவர் முபசீரா:- சாலையில் தூங்கிக்கொண்டு கிடக்கும் தெருநாயை கூட பிடிக்க முடியாத அளவுக்கு நமது மாநகராட்சி பணியாளர்கள் உள்ளனர்.
கவுன்சிலர் மோகன்:- தெருநாய் கடித்து நான் பாதிக்கப்பட்டேன். தெருநாயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்தடை சிகிச்சை மையம்
துணை கமிஷனர் சர்மிளா:- கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. கவுண்டம்பாளையம் உள்பட மேலும் 3 இடங்களில் தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மேற்கு மண்டல தலைவர் தெய்வானை:- மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க வேண்டும். எங்கள் பகுதியில் மட்டும் மாநகராட்சிக்கு சொந்தமான 40 இடங்கள் உள்ளன. இவை வேலி இல்லாமல் இருப்பதால் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவற்றை பாதுகாக்க வேண்டும்.
ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
துணை கமிஷனர் சர்மிளா:- மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க ரூ.1 கோடியே ஒரு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களின் பட்டியலை கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சித்ரா வெள்ளியங்கிரி:- பொதுகுழாய்களை அப்புறப்படுத்தக்கூடாது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இதன் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். கோவையில் கொசு தொல்லையை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
சுகாதார பணி பாதிப்பு
கோவை மாநகராட்சி கூட்டத்தில் சுகாதார பாதிப்புகள் குறித்து பல்வேறு கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினார்கள். இதுதொடர்பாக மத்திய மண்டல தலைவர் மீனாலோகு பேசும்போது கூறியதாவது:-
சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாநகராட்சி உள்ளது. வரி வருவாயிலும் 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் மாநகராட்சியில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதில்லை. வாகனங்கள், தூய்மை பணியாளர்கள் இருந்தாலும் குப்பைகள் முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே தூய்மை பணியாளர்களை கண்காணித்து முறையாக வேலை வாங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த துணை கமிஷனர் சர்மிளா, 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தூய்மை பணியாளர்கள் கையெழுத்திடும் நிலையை உருவாக்கி தூய்மை பணி கண்காணிக்கப்படும் என்று கூறினார்.
மழை நீர் தேக்கம்
22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு:- எனது வார்டில் நேதாஜி பூங்காவில் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்கி சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை. மலர் அவென்யூ எழில் நகர் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறினார்.இதற்கு பதில் அளித்த மேயர் ஒரு மாதத்துக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார்.
அம்மா உணவகம்
மேலும் கவுன்சிலர்கள் பேசும்போது, வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தரமான சீருடைகள் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் சாப்பிடாமல் வேலைக்கு வருவதால் அம்மா உணவகத்தில் சிற்றுண்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், பொதுகுழாய் துண்டிப்பு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம் வருமாறு:-
119 பொது குழாய்கள் துண்டிப்பு
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 77 மற்றும் 78-வது வார்டுகளில் 119 பொதுக்குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குழாயின் மூலம் 6,095 மக்கள் பயன் பெறுகிறார்கள். அவர்களுக்கு தினசரி 3 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய்கள் 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்குவதால், மாநக ராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.9 லட்சத்து 61 ஆயிரத்து 200 வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் அந்த 119 பொதுக்குழாய் இணைப்புகளை துண்டிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ரூ.250 என குறைந்த வைப்பு தொகையுடன் வீடுகளுக்கு தனி இணைப்புகள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேர சூயஸ் திட்ட பணிகள் முடிந்த பகுதிகளில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
------------------
கோவை மாநகரில்
பாதாளசாக்கடை இணைப்புக்கு மாதாந்திர கட்டணம் நிர்ணயம்
கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், முக்கியமாக பாதாள சாக்கடை இணைப்புக்கு சதுர அடிபரப்பளவு கட்டிடத்துக்கு தகுந்தவாறு மாதாந்திர கட்டணம் வசூலிக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.அந்த தீர்மான விவரம் வருமாறு:-
கோவை மாநகர பகுதியில் வகைப்படுத்தப்பட்ட கட்டிட பரப்பளவு அடிப்படையில், பாதாள சாக்கடை வீட்டு இணைப்புக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்டு உபயோகத்தில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை முழு அளவிலான உபயோகத்துக்கு கொண்டு வரவும், குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவாக முடித்து முழு அளவில் வீட்டு இணைப்புகள் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக வீட்டு இணைப்பு வழங்குவதற்கான வைப்புத்தொகை மற்றும் இணைப்பு கட்டணங்களை சம்பந்தப்பட்ட வீட்டின் வரி விதிப்புடன் இணைத்து ஒரே தவணை அல்லது 10 தவணை வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 600 சதுரஅடி வரை உள்ள வீடுகளுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.110-ம், வைப்பு தொகையாக ரூ.7,500-ம் செலுத்த வேண்டும். 601 முதல் 1200 சதுரஅடி வரை ரூ.140 வசூலிக்கப்படும். மேலும் வைப்புத்தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதேபோல 1,201 முதல் 1,800 சதுரஅடி வரையும், 1,801 முதல் 2,400 சதுரஅடி வரையும், 2,401 சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வணிக கட்டிடங்களுக்கு 600 சதுரஅடி வரை மாதாந்திர கட்டணம் ரூ.330-ம், வைப்புத்தொகையாக ரூ.15 ஆயிரம், 601 முதல் 1,200 சதுரஅடி வரை மாத கட்டணம் ரூ.420-ம் வைப்புத்தொகை ரூ.20 ஆயிரமும் செலுத்த வேண்டும். இதேபோல 1,201 முதல் 2,401 சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு மாத கட்டணம் மற்றும் வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்களை நகராட்சி நிர்வாக இயக்குனரக தலைமைப்பொறியாளர் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.