கூடலூரில் சிதிலமடைந்த சிவன் கோவிலை சீரமைக்க முடிவு
கூடலூரில் சிதிலமடைந்த சிவன் கோவிலை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
கூடலூரில், அரசு விதைப்பண்ணை சாலையில் பழமையான ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பண்டைய காலத்தில் கூடலூரை ஆட்சி செய்த பூஞ்சையாற்று ராஜா தம்பிரான் கட்டியதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இந்த கோவிலில் பல்வேறு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. ஆனால் நாளடைவில் முறையாக பராமரிக்காததால் தற்போது அந்த கோவிலில் சிலைகள், கோபுரம், தூண்கள், சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும் புதர்மண்டி கோவில் இடியும் நிலையில் உள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் இந்த கோவிலின் சிறப்பு பற்றிய விவரங்களை சேகரித்து சென்றனர்.
இந்தநிலையில் கூடலூர் ஈஸ்வரன் கோவிலை புனரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு, கேரள ஜோதிடர் சோட்டாணிக்கரையை சேர்ந்த ரிஷிகேஷ் தலைமை தாங்கினார். பூஞ்சையாற்று ராஜாவின் வாரிசான ஸ்ரீஜித், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளிநாடுவாழ் இந்தியர் சதாசிவம் மற்றும் கூடலூர் அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், சிதிலமடைந்த சிவன் கோவிலை புனரமைப்பது, அதன் அருகிலேயே புதிய சிவன் கோவில் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான பணிகள் 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டது.