அழகிய பூங்காவுடன் 'நம்ம வேலூர் செல்பி பாய்ண்ட்' அமைக்க முடிவு


அழகிய பூங்காவுடன் நம்ம வேலூர் செல்பி பாய்ண்ட் அமைக்க முடிவு
x

வேலூரில் அழகிய பூங்காவுடன் ‘நம்ம வேலூர் செல்பி பாய்ண்ட்’ அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூரில் அழகிய பூங்காவுடன் 'நம்ம வேலூர் செல்பி பாய்ண்ட்' அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு

வேலூர் மாநகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில் குமார் முன்னிலை வகித்தார். கமிஷனர் அசோக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மேயர் சுஜாதா முதல் தீர்மானமாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பள்ளி குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கு மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிப்பது, மாநகராட்சியின் மையப்பகுதியில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூண் அருகில் நம்ம வேலூர் என்ற தலைப்பில் அனைத்து தரப்பு மக்களும் நினைவு கூறும் வகையில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் அழகிய பூங்கா மற்றும் நம்ம வேலூர் என்ற வடிவில் செல்பி எடுத்துக் கொள்ள 'செல்பி பாய்ண்ட்' அமைக்கப்பட உள்ளது. மேலும் வார்டு குழு அமைத்தல், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற தீர்மானங்களை வாசித்து நிறைவேற்றினார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கப்பட்டது. மொத்தம் 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, கவுன்சிலர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதற்கு மேயர், துணை மேயர், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பதிலளித்தனர். அதன்விவரம் வருமாறு:-

பாதாள சாக்கடை திட்டம்

அன்பு: எனது வார்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. கடந்த 8 மாதமாக எந்த பணியும் நடைபெறவில்லை. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி மேற்கொள்ள ஒப்பந்தம் விடாததற்கு காரணம் என்ன?, மின்விளக்கு ஏன் இதுவரை அமைக்கப்படவில்லை. மக்களின் அடிப்படை தேவையான ரோடு, குடிநீர், மின்விளக்கு வசதியை நாம்தான் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ்: எனது வார்டில் சாலை வசதி ஏதும் இல்லை. ஆனால் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாதாளசாக்கடை திட்டம் முடிக்கப்படாமல் ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. பாண்டியன் மதகு பகுதி தூர்வார வேண்டும். குடிநீர் முறையாக வினியோகிக்க வேண்டும். முறையாக வினியோகிக்கப்படாமல் வரி வசூல் செய்யப்படுகிறது. முதியோர்களுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ்சங்கர்: வேலூர் மாநகராட்சியில் கால்வாய் தூர்வார எத்தனை வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. ஏற்கனவே மண்டல அலுவலகங்களில் இடையூறாக பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதை முறைபடுத்த வேண்டும். மாநகராட்சி அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இயங்கக்கூடிய உணவகம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை வசதி

சுமதி: எனது வார்ட்டில் பல தெருக்களில் சாலை அமைக்கப்படவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புஷ்பலதா(1-வது மண்டலக்குழு தலைவர்): பழையகாட்பாடி, தாராபடவேடு, கல்புதூர் போன்ற பகுதிகளில் மழைநீர் செல்வதற்கு நேரு தெரு முதல் வி.ஜி.ராவ் நகர் வரை கால்வாய் அமைக்க வேண்டும். கழிஞ்சூர் ஏரி நீரால் ஈ.பி.காலனி மக்கள் பாதிப்படைகின்றனர். நீர்தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1-வது மண்டலத்துக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

துணை மேயர் சுனில்குமார்: மழைக்காலத்தை முன்னிட்டு பணி செய்த ஒப்பந்ததாரருக்கு பில் தொகை பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நரேந்திரன், 2-வது மண்டலக்குழு தலைவர்: லாங்குபஜாரில் உள்ள மணிக்கூண்டினை சரிசெய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதற்கு கமிஷனர் அசோக்குமார் பதிலளித்து பேசுகையில்'' பணிகள் மேற்கொள்ள டெண்டர் விட அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி வரப்பெற்ற பின் பணிகள் மேற்கொள்ளப்படும். மாநகராட்சியில் தற்போது 675 மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தபுள்ளி விடப்படும். இன்னும் 4 ஆயிரம் மின் விளக்குகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 3 மாதத்துக்குள் முடிக்கப்படும். கால்வாய்களை தூர்வார லாரிகள், பொக்லைன் எந்திரங்கள், 4 சிறிய வகை ஹிட்டாச்சி வாகனங்கள் விரைவில் வாங்கப்பட்டு கால்வாய்கள் தூர்வாரப்படும்'' என்றார்.

கூட்டத்தில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story