சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு


திற்பரப்பு அருவியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குலசேகரம்:

திற்பரப்பு அருவியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சுற்றுலா தலம்

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தற்போது கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளதால் அருவியில் மிதமாக தண்ணீர் பாய்கிறது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் கார் போன்ற வாகனங்களில் வந்தனர். அவர்கள் அருவில் குளித்து மகிழ்ந்து, சிறுவர் பூங்காவில் விளையாடி, தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

திருட்டு சம்பவங்கள்

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளின் நகைகள் உள்பட விலை உயர்ந்தப் பொருள்கள் கார்களில் இருந்தும், குளிக்கும் பகுதியில் இருந்தும் திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருவி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை முறையாக பராமரிக்காததால் செயலிழந்து போயின.

இந்தநிலையில் மாவட்ட காவல் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் திற்பரப்பு அருவி பகுதியில் ஆய்வு செய்தார். அவருடன் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு

இந்த ஆய்வின் போது பாதுகாப்பை மேம்படுத்த அருவிக்கு செல்லும் நுழைவுப் பகுதி முதல் வாகனங்கள் நிறுத்தப்படும் கடைசி எல்லைப் பகுதி வரை கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்கவும், வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்தின் மத்தியில் கண்காணிப்புக் கோபுரம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக குலசேகரம் முதல் திற்பரப்பு வரை 5 மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்து கொண்டார்.


Next Story