குறைந்து வரும் ஜமுக்காள உற்பத்தி கேள்விக்குறியாகும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை


குறைந்து வரும் ஜமுக்காள உற்பத்தி  கேள்விக்குறியாகும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம்  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2022 1:00 AM IST (Updated: 18 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கை

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கைத்தறி நெசவு தொழில் இருந்து வந்தது. ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கைத்தறி நெசவு தொழில் வளர்ச்சி அடையாமல் பாதிப்பு அடைந்து வருகிறது. கைத்தறி நெசவு தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாதவர்கள், வேறு தொழிலுக்கு மாற மனம் இல்லாதவர்கள் மற்றும் உயிருக்கு இணையாக கைத்தறி நெசவு தொழிலை நேசிப்பவர்கள் என ஒரு சிலரே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் உரிய வருமானம் கிடைப்பதில்லை. எனினும் தங்களுடைய இந்த தொழிலை விடாமல் செய்து வருகிறார்கள்.

5 ஆயிரம் நெசவாளர்கள்

அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட அந்தியூர், தவுட்டுப்பாளையம், பச்சாபாளையம், வேம்பத்தி, கூத்தம்பூண்டி, கீழ்வாணி, ஆலம்பாளையம், பிரம்மதேசம் வெள்ளாளபாளையம் மற்றும் ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஜமுக்காளம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தியூர் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் சங்க உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர். எனினும் இதில் குறைந்த அளவிலான நெசவாளர்களே தற்போது ஜமுக்காள நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்குள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.

இதுபற்றி கைத்தறி ெதாழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

மகாலிங்கம்

கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அந்தியூர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கூறுகையில், 'நெசவுத் தொழில் செய்வதற்கு சரிவர நூல் எங்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் நாள் ஒன்றுக்கு நெசவு நெய்தால் எங்களுக்கு ரூ.100 வரை மட்டுமே கிடைக்கிறது. இதன் மூலம் குடும்பத்தை எவ்வாறு நடத்த முடியும். 'பிளேஸ்மேட்' என்ற ஜமுக்காள ரகத்தை நெய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்கினால் எங்களுக்கு கூலி உயர்வும் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும். எனவே கைத்தறி நெசவாளர்களின் வருமானத்தை பெருக்க மீண்டும் 'பிளேஸ்மேட்' ரகத்தை உற்பத்தி செய்ய எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்,' என்றார்.

முருகேசன்

வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் முருகேசன் கூறுகையில், 'கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் கைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடிய ஜமுக்காளங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை அரசு தடை செய்ய வேண்டும். மேலும் அரசின் சலுகைகளை பெறுவதற்கு கைத்தறி நெசவாளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மாற்று தொழிலில் ஈடுபடாமல் இருப்பதற்கு சங்க தலைவர்கள் பாடுபட வேண்டும். அந்தியூர் தாலுகா பகுதியில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு கிராமத்திலும் முக்கிய தொழிலாக இயங்கி வந்த கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் கிராம மக்கள் தங்களுக்கு தேவையான வருமானத்தை ஈட்ட முடியும். கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள சங்க உறுப்பினர்களுக்கு போதுமான அளவு நெசவு நெய்வதற்கு நூல் வழங்க வேண்டும். ஏற்றுமதி செய்யக்கூடிய ரகமான 'பிளேஸ்மேட்' என்ற ரகத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும்,' என்றார்.

மணிமேகலை

முனியப்பன் பாளையத்தை சேர்ந்த கைத்தறி நெசவாளரான மணிமேகலை கூறுகையில், 'தற்போது எங்களுக்கு சரிவர நூல் கிடைப்பதில்லை. மேலும் கூலியும் அதிகமாக கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் 100 நாள் வேலை, செங்கல் சூளை மற்றும் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகிறோம். கைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வுக்கும், வருமானத்துக்கும் 'பிளேஸ்மேட்' என்ற ஜமுக்காள ரகத்தை கைத்தறியில் நெசவு செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் 60 வயது முடிந்தவர்களுக்கு பென்ஷன் தொகையாக வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாயை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்,' என்றார்.

மாற்று தொழிலுக்கு...

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில், 'கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் குடும்பம், குடும்பமாக கைத்தறி ஜமுக்காள உற்பத்தியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் நூல் விலை உயர்வு. சரியான நேரத்துக்கு நூல் கிடைக்காதது. குடும்பம் நடத்த தேவையான, கட்டுப்படியான கூலி கிடைக்காமை ேபான்ற காரணங்களால் நெசவு தொழிலில் இருந்து நாங்கள் மாற்று தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் கைத்தறியில் நெசவு செய்யக்கூடிய ரகங்கள் விசைத்தறியில் நெசவு செய்யப்படுகிறது. இதனால் எங்களுடைய வேலை மறைமுகமாக பாதிக்கப்படுகிறது.

'பிளேஸ்மேட்' ரகம்

கடந்த 2011-ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 'பிளேஸ்மேட்' என்ற ரகம் நெசவு நெய்வதற்காக கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த ரகத்துக்கு அதிகப்படியான கூலி வழங்கப்பட்டு வந்தது. இதனால் குடும்ப உறுப்பினர்களான கணவன், மனைவி என 2 பேரும் சேர்ந்து வேலை செய்தால் வாரத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கிடைத்தது. தற்போது 'பிளேஸ்மேட்' ரக ஜமுக்காள உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் ெநசவாளர்களின் வருமானம் வாரத்துக்கு ரூ.1,000-க்கும் கீழே சென்றுவிட்டது. இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு நாங்கள் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும். மேலும் நெசவு கூட்டுறவு சங்கத்தின் மூலம் நூல் எங்களுக்கு சரியாக வழங்கப்படுவதும் இல்லை. பல்வேறு இடர்பாடுகளால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் நாங்கள் நெசவு தொழிலை கைவிட்டு வேறு வேலைக்கு மாறி சென்று வருகிறோம். எங்களில் பலர் செங்கல் உற்பத்தி, விவசாய கூலி வேலை, 100 நாள் வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கு சென்று வருகிறோம்.

வாழ்வாதாரம் மேம்பட...

மேலும் கைத்தறி நெசவு உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மூலம் வீடு கட்டி கொள்வதற்காக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம், இலவச மருத்துவ காப்பீடு, 200 யூனிட் இலவச மின்சாரம், சங்க உறுப்பினர்கள் யாராவது விபத்து ஏற்பட்டு உயிர் இழந்தாலும் அல்லது விபத்து ஏற்பட்டாலோ அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வருமான இழப்பு காரணமாக நாங்கள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டதால், அரசின் சலுகைகளை பெறமுடியாத நிலையிலும் உள்ளோம். எனவே கைத்தறி ரகமான ஜமுக்காளத்தை விசைத்தறியில் நெய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் தரமான கைத்தறி ஜமுக்காளம் உற்பத்தி செய்யப்படுவதுடன், வெளிமார்க்கெட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன்காரணமாக கைத்தறி ஜமுக்காள விற்பனை அதிகரிக்கும். இதனால் கண்டிப்பாக ஜமுக்காள உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கும். எங்களுக்கு தொடர்ந்து வேலை இருப்பதுடன், வாழ்வாதாரத்துக்கு தேவையான கூலியும் கிடைக்கும். எனவே அரசு எங்களுடைய வாழ்வாதாரம் மேம்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

எஸ்.பி.ரமேஷ்

அந்தியூர் கைத்தறி நெசவாளர் உற்பத்தி சங்க தலைவரும், தமிழ்நாடு கோ-ஆப் டெக்ஸ் இயக்குனருமான எஸ்.பி.ரமேஷ் கூறுகையில், 'அந்தியூர் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு உள்ள சங்க உறுப்பினர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சங்க உறுப்பினா்கள் தங்களுக்கு சரியான வருமானம் கிடைப்பதில்லை எனக்கூறி வேறு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கத்தில் 100 பேர் இருந்தால் 75 பேர் மட்டுமே சரியாக ஜமுக்காள உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அரசின் சலுகைகளை பெறுவதற்கு கைத்தறி நெசவாளர் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து ஜமுக்காள உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் அரசின் சலுகைகளை வாழ்நாள் முழுவதும் பெற முடியும்,' என்றார்.

கைத்தறி தொழில் சமீபகாலமாக நசிந்து வருகிறது. கைத்தறி நெய்வதற்கான நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விசைத்தறியில் கைத்தறி நெய்வதை தடுக்க வேண்டும். அப்போதுதான் கேள்விக்குறியாகும் கைத்தறி தொழிலை காப்பாற்ற முடியும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை நிலை மேம்படும். இதுவே கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story