தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?ரசிகர்கள் கருத்து


தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?ரசிகர்கள் கருத்து
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம்

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான். காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது. 100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது. தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

மக்கள் மனதில் இருந்து அகலவில்லை

விழுப்புரம் கல்யாண் தியேட்டர் உரிமையாளர் விஜய்:-

அனைத்து சமுதாய மக்களையும் எந்தவித பாகுபாடும், ஏற்றத்தாழ்வும் இன்றி ஒரே இடத்தில் அமர்ந்து பார்க்கிற மகிழ்ச்சியை சினிமா தியேட்டர்கள்தான் கொடுத்து வருகிறது.

கல்வி நிறுவனங்களுக்கு அடுத்தாற்போல் அனைத்து தரப்பினரையும் ஒரே இடத்திற்கு கொண்டு வருவது பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சினிமா தியேட்டர்கள்தான். அந்த வகையில் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவராகிய நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த கதாநாயகர்களை பெரிய திரையில் பார்க்கும்போது ஏதோ அவர்களை நேரில் பார்த்ததுபோன்ற மனநிறைவு அடைகின்றனர்.

விழுப்புரத்தை பொறுத்தவரை பொழுதுபோக்கு அம்சம் என்று சொன்னால் பூந்தோட்டம் குளம். அங்கு தினமும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதுபோல் வழிபாட்டு தலங்களுக்கும் மக்கள் அதிகம் செல்வார்கள். அதற்கடுத்து பார்த்தால் சினிமா தியேட்டர்களின்தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பெரிய நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், பெரியளவிலான பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் ரிலீசாகும்போது பெரும்பாலானோர் தியேட்டர்களுக்கு வந்து பார்ப்பதைத்தான் விரும்புகிறார்கள். விரல்நுனியில் பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும் இன்னும் பெரும்பாலானோர் குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சினிமா தியேட்டர்களுக்கு வந்து திரைப்படங்களை பார்ப்பதற்குத்தான் ஆசைப்படுகிறார்கள். இதிலிருந்து தியேட்டர் மீதான மோகம் மட்டும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்து டி.வி.யிலோ அல்லது செல்போனிலோ திரைப்படம் பார்த்தாலும்கூட குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்ப்பதில் கிடைக்கிற மகிழ்ச்சி, வீட்டிலேயே அமர்ந்து பார்ப்பதில் கிடைக்காது. இதனை தியேட்டருக்கு வரும் மக்களின் வருகை மூலம் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நாங்களும் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறோம். எனவே ரசிகர்கள் மத்தியில், தியேட்டர்கள் மீதான மவுசு மட்டும் இன்னும் குறையவில்லை என்பது எனது கருத்தாகும்.

ஓ.டி.டி. தளங்கள்

விழுப்புரம் அருகே பில்லூரை சேர்ந்த அகத்தியன்:-

தியேட்டர்களில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் படங்களை எப்போதும்போல் ஆர்வத்துடன் சென்று பார்க்கிறார்கள். சிலர் அவரவர்களுக்கு பிடித்த இயக்குனர்களின் படங்களையும் தியேட்டருக்கு ஆர்வமுடன் பார்க்க செல்கிறார்கள். இன்னும் சிலர், திரைப்படத்தின் கருத்துக்களையும், தொலைநோக்கு சிந்தனையையும் தெரிந்துகொள்ள தியேட்டருக்கு செல்கிறார்கள். ஆனால் தற்போது ஓ.டி.டி.யில் திரைப்படங்கள் பார்ப்பது, இணையத்தின் மூலம் பார்ப்பதால் தியேட்டர்களில் பார்க்கும் ஆர்வம் சற்று குறைந்து வருவதாக தெரிகிறது. அவரவர்கள் கால சூழல்களை பொறுத்தே தியேட்டர்களுக்கு செல்வது குறைந்து இருக்கலாம். ஆனால் பொதுவாக தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு சென்று திரைப்படங்களை பார்ப்பதில்தான் பலருக்கும் மகிழ்ச்சியை தருவதாக அமைகிறது.

ரசிகர்கள் குறைவுதான்

மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த காசி பாலாஜி:-

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களை தவிர வேறு யாரும் சினிமா தியேட்டர்களுக்கு செல்வதில்லை என்றுதான் நினைக்கிறேன். காரணம் டிக்கெட் விலை, உள்ளே விற்கப்படும் உணவுப்பண்டங்கள் இவையெல்லாம் ஏழை, எளிய, நடுத்தர மக்களால் சமாளிக்க முடியவில்லை. ஒரு சில திரைப்படங்கள் தவிர பெரும்பாலான திரைப்படங்களை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் சினிமா தியேட்டர்களில் ரிலீசான படங்கள் ஓரிரு மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இதனாலேயே சினிமா தியேட்டர்களில் சென்று படம் பார்ப்பதைவிட வீட்டிலேயே ஓரிரு மாதங்களில் பார்க்கலாம் என்ற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி.கள் பெருகிவிட்டதால் சினிமா தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் குறைவுதான் என நான் நினைக்கிறேன்.

செஞ்சி அருகே மேலச்சேரியை சேர்ந்த மணி:-

முன்பெல்லாம் வீட்டில் ஒருவர் வேலைக்கு செல்வார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் கிடைக்கும்போது குடும்பத்துடன் சினிமா தியேட்டர்களுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதும், நண்பர்களுடன் சென்று பார்ப்பதும் இருந்து வந்தது. தற்போது சனிக்கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் வேலை பார்த்தால் கூடுதல் சம்பளம் என்று ஒன்று இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலே ஓய்வு எடுப்பதற்கு சரியாக இருக்கிறது. ஆகையால் சினிமா தியேட்டர்களுக்கு சென்று திரைப்படம் பார்ப்பதற்கு இளைஞர்களிடையே மிகவும் ஆர்வம் குறைந்து வருவதற்கு இதுவும் ஒரு காரணம்.

திண்டிவனம் கல்லூரி மாணவி சுதா:-

தியேட்டர்களில் சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் தற்போது மக்களிடையேயும், இளைஞர்கள் மத்தியிலும் குறைந்து வருகிறது. மேலும் வசதி உள்ளவர்கள் வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வைத்து பார்த்து விடுகிறார்கள் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகரின் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதால்தான் தற்போதும் தியேட்டர்கள் இயங்கி வருகின்றன. பொழுதுபோக்குக்காக நடுத்தர குடும்பத்தினர்கள், தியேட்டருக்கு வழக்கம்போல் சென்று வருகிறார்கள்.

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை

கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுகுமார்:-

தமிழகத்தில் தற்போது திரையரங்கங்களுக்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் தற்போது குறைந்து வருகிறது. இதற்கு காரணம் முன்பு டிக்கெட் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது குறைந்தபட்சம் ஒரு டிக்கெட் விலை ரூ. 120-க்கு மேல் உள்ளது. உச்ச நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குவதால், தயாரிப்பு செலவு அதிகமாகிறது. இதனால் படங்களை அதிக விலைக்கு வினியோகஸ்தர்கள் மூலம் திரையரங்கங்களுக்கு தயாரிப்பாளர்கள் விற்பனை செய்கின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் படம் பார்க்க சென்றால் ரூ.1000-க்கு மேல் செலவாகிறது. மேலும் திரையரங்குகளில் தின்பண்டங்கள் விலையும் தாறுமாறக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு ஏழை குடும்பத்தினர் திரையரங்குகளில் படம் பார்க்க சென்றால், அவர்களின் மாத வருமானத்தின் ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் பெரும்பாலான மக்கள் தற்போது திரையங்குகளுக்கு சென்று படம் பார்ப்பததை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க டிக்கெட் விலை மற்றும் தின்பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும்.

தவறான சினிமா விமர்சனங்கள்

ஆலத்தூரை சேர்ந்த கண்ணன்:-

தற்போது பெண்கள் அனைவரும் டி.வி. சீரியல் பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் குறைந்து வருகிறது. மேலும் திரையரங்கத்திற்கு சென்று படம் பார்த்தால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால், அதனை தவிர்க்கும் வகையில் தற்போது உள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் புதிய படங்கள் வெளியான உடனே அதனை தனது செல்போன் மூலம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்கின்றனர். பின்னர் அதனை தங்களது வீடுகளில் உள்ள டி.வி.யில் போட்டு குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கின்றனர். முக்கிய நடிகர்களின் புதிய படம் வந்தால் மட்டுமே பெரும்பாலான இளைஞர்கள் திரையங்கங்களுக்கு சென்று படம் பார்க்கின்றனர். மேலும் தற்போது புதிய படங்கள் வெளியான உடனே திரைவிமர்சனம் என்கிற பெயரில் படங்களை பற்றி தவறான விமர்சனங்களை சமூகவலைத்தளத்தின் மூலம் சிலர் பரப்புகின்றனர். இது தவிர பெரும்பாலான சினிமா ரசிகர்கள் தனக்கு பிடித்தமான நடிகரின் படம் மட்டுமே ஓட வேண்டும் என நினைக்கின்றனர். இதனால் அவர்கள் சக நடிகரின் படங்கள் வந்தால், அந்த படத்தை பற்றி தவறான கருத்துகளை போட்டி போட்டு சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். இதனை நம்பியும் பலர் திரையங்கத்திற்கு சென்று படம் பார்ப்பதை தவிர்க்கின்றனர். எனவே இதுபோன்ற தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டிக்கெட் விலை, தின்பண்டங்கள் விலையையும் குறைக்க வேண்டும்.

மவுசு குறையாது

சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் நிர்வாக பங்குதாரர் வெங்கடேஷ்:- கடந்த 36 ஆண்டுகளாக தியேட்டர் நடத்தி வருகிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். ஆனாலும், தியேட்டர் மீதான மோகம் மட்டும் மக்கள் மனதில் இருந்து அகலவில்லை.

தமிழகத்தில் 2 ஆயிரத்து 800 தியேட்டர்கள் இருந்தன. அவற்றில் தற்போது இருப்பது 500 மட்டும்தான். 2 ஆயிரத்து 800 தியேட்டர்கள் இருந்த போது ஒரு திரை (ஸ்கிரின்) என்ற அடிப்படையில் 2,800 திரைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது பல தியேட்டர்களில் 2 முதல் 4 திரைகள் வரை உள்ளன. இதன்படி பார்த்தால் தற்போதுள்ள 500 தியேட்டர்கள் மூலம் 1,145 திரைகள் உள்ளன. சென்னையில் இருந்து வந்த 85 தியேட்டர்களில் 35 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. தற்போது 50 தியேட்டர்கள் மட்டுமே உள்ளன.

தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்தபோதிலும் தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி எந்த தொழில்நுட்பமும் தருவதில்லை என்பதை மட்டும் மக்களின் தொடர் வருகை மூலம் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் மகிழ்ச்சிக்கு ஏற்றாற்போல் புதுப்புது தொழில்நுட்பங்களை நாங்கள் புகுத்தி வருகிறோம்.

குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் போது கொஞ்சம் கூடுதலாக செலவாகத்தான் செய்யும். அவ்வாறு செலவு செய்தாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது விவரிக்க முடியாது. தியேட்டரில் பார்க்கும் அதே படத்தை தினம்தோறும் உலாவரும் வீட்டுக்குள் ஒரு அறையில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சி கிடைக்கவில்லை என்பதும் மக்கள் மனதில் இருந்து வரும் ஆழமான கருத்து. உண்மையும் இதுதான். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தியேட்டர்கள் மீதான மவுசு மட்டும் குறையாது.


Next Story