குறைந்து வரும் தக்காளி, பீன்ஸ் விலை
தஞ்சையில் தக்காளி, பீன்ஸ் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சையில் தக்காளி, பீன்ஸ் விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காமராஜர் மார்க்கெட்
தஞ்சை அரண்மனை வளாகம் அருகே காமராஜர் மார்கெட் உள்ளது. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதேபோல் தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கு காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, தளிக்கோட்டை, ஓசூர் போன்ற பகுதிகளில் வரத்து அதிகமானதால் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை வெகுவாக குறைந்துள்ளது.
தக்காளி கிலோ ரூ.40
அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றாக தக்காளி விளங்கி வருகிறது. இந்த நிலையில் வெளி மாநிலங்களில் நிலவி வந்த பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்தது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளையும், ஓட்டல் உரிமையாளர்களையும் கலக்கம் அடைய செய்தது.
மேலும் தக்காளி விலை உயர்வால் தஞ்சை காமராஜர் மார்க்கெட் பகுதியில் விற்பனை மந்தமாக காணப்பட்டது. தற்போது தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்ததால் மகிழ்ச்சி அடைந்த இல்லத்தரசிகள் நேற்று அதிகளவில் வாங்கி சென்றனர்..
கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.20 குறைந்து ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. கடந்த வாரம் பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலில் தக்காளி முக்கிய இடம் வகிப்பதால் பொதுமக்கள் அவற்றை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர்.
விலை குறைந்தும் விற்பனை இல்லை
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில் ஒட்டன்சத்திரம், தளிக்கோட்டை, ஒசூர், போன்ற பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் தக்காளி, பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இருந்தாலும் விற்பனை மந்தமாக இருந்தது என்றனர்.