'தடையின்றி மீன்பிடிக்க செல்ல உப்பனாற்றை ஆழப்படுத்துங்கள்'மீனவர்கள் வலியுறுத்தல்
‘தடையின்றி மீன்பிடிக்க செல்ல உப்பனாற்றை ஆழப்படுத்துங்கள்’ என மாவட்ட நிர்வாகத்தை மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கிய தென்ஆற்காடு மாவட்டத்தில் இருந்து 1993 செப்டம்பர் 30-ந்தேதி பிரித்து கடலூர் தனி மாவட்டமாக உருவானது. கடலூர் மாவட்டம் உதயமாகி 30 ஆண்டுகள் ஆகப்போகிறது. கடலூர் மாநகரம் மாவட்ட தலைநகரமாக இருந்து வருகிறது. மாநகராட்சி பகுதியில் பாடலீஸ்வரர்கோவில், வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்கள் உள்ளன.
உப்பனாறு
இது தவிர மாநகர மையப்பகுதி வழியாக தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு ஓடி வங்கக்கடலில் சங்க மிக்கிறது. இதன் கிளை ஆறாக உப்பனாறு செல்கிறது. இந்த உப்பனாறு தென்பெண்ணையாற்றில் தாழங்குடா மேம்பால பகுதியில் இருந்து பிரிந்து, தேவனாம்பட்டினம் வழியாக கடலூர் முதுநகர் துறைமுகத்தை சென்றடைகிறது. முன்பு பெரிய ஆறாக ஓடியது. தற்போது ஆக்கிரமிப்பால் சிறிய ஆறாக ஓடி வருகிறது.
மழைக்காலங்களில் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது, இந்த உப்பனாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அந்த தண்ணீர் தேவனாம்பட்டினம், கே.கே. நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும். அந்த தண்ணீரை வடிய வைக்க 2 வாரங்களுக்கு மேல் ஆகும்.
சுனாமிக்கு பிறகு...
இந்நிலையில் இங்குள்ள வங்கக் கடலில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் பேரலை தாக்கியதில், தேவனாம்பட்டினம், தாழங்குடா ஆகிய மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்குள்ள மீனவர்களின் படகுகள், வலைகள் மட்டுமின்றி வீடுகளையும் கடல் அலைகள் அடித்துச்சென்று விட்டன. கடற்கரையில் நின்ற மீனவர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பலியாகி விட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கடற்கரையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடல் அலை அரிப்பை தடுக்க தேவனாம்பட்டினம், தாழங்குடா கடற்கரையோரம் கருங்கல் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரையோரம் கட்டு மரம், பைபர் படகுகளை நிறுத்தி மீன் பிடித்து வந்த இப்பகுதி மீனவர்கள், அதன்பிறகு இந்த உப்பனாற்றில் படகுகளை நிறுத்தி, அங்கிருந்து கடலூர் துறைமுகத்திற்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உப்பனாற்றின் கரையோரம் படகுகளை நிறுத்தி வைக்கும் மீனவர்களும் இதே வழியாக தான் துறைமுகத்திற்கு சென்று வருகிறார்கள்.
படகு துறை
சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உப்பனாறு வழியாக தான் துறைமுகத்திற்கு சென்று, அங்கிருந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். பெரும்பாலான மீனவர்கள் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தினாலும் உப்பனாற்றில் தான் மற்ற மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் உப்பனாற்றில் கோடைக்காலங்களில் தண்ணீர் வறண்டு விடும். அப்போது மீனவர்கள் தங்கள் படகுகளை உப்பனாறு வழியாக கடலுக்கு கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்படுவார்கள். இதனால் மீன்பிடிக்க செல்வதில்லை.
ஆகவே உப்பனாற்றை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்தினால், மீனவர்கள் தங்கு தடையின்றி மீன்பிடிக்க ஏதுவாக இருக்கும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படகுகளை நிறுத்த படகு துறை அமைத்து தந்தால் பயன் உள்ளதாக இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது பற்றி தேவனாம்பட்டினம் மீனவர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
தூர்வார வேண்டும்
பாக்கியராஜ் கூறுகையில், சுனாமிக்கு பிறகு தேவனாம்பட்டினம் மீனவர்கள் பெரும்பாலும் உப்பனாற்றில் தான் படகுகளை நிறுத்தி, துறைமுகத்திற்கு சென்று மீன்பிடித்து வருகிறோம். இது எங்களுக்கு எளிதாக இருக்கிறது.
கடல் நீர் மட்டம் குறையும் போது, உப்பனாற்றில் தண்ணீர் குறைந்து விடும். அதேபோல் கோடை காலத்திலும் தண்ணீர் குறைந்து விடும். அப்போது, மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் படகுகளை லாரிகளில் ஏற்றி, துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்படும். சிலர் தொழிலுக்கு செல்வதில்லை. ஆகவே இந்த உப்பனாற்றை தூர்வாரி ஆழப்படுத்தி, இரு புறமும் கரைகள் அமைத்தால் எங்களுக்கு தொழிலுக்கு சென்று வர வசதியாக இருக்கும் என்றார்.
மீன்பிடி வலைகள்
குணபாலன் கூறுகையில், மீன்பிடி தொழிலுக்கு இந்த உப்பனாற்றை தான் பயன்படுத்தி வருகிறோம். அப்படி மீன்பிடித்து வரும் போது, எங்கள் படகுகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை. கரையோரம் இருக்கும் மரங்களில் தான் படகுகளை கட்டி வைத்து உள்ளோம். மீன்பிடி வலைகளையும் கரையோரம் போட்டு வைத்துள்ளோம். மீன்பிடித்து விட்டு ஒவ்வொரு முறையும் வலைகளை வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாது. இதனால் கரையோரம் போட்டு வைத்துள்ளோம். அது மழையிலும், வெயிலிலும் சில நேரங்களில் வீணாகி விடுகிறது. இதனால் எங்களுக்கு வலைகள் வைக்க ஒரு இடமும், படகுகள் நிறுத்த படகு துறையும் அமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்றார்.
ஆழப்படுத்த வேண்டும்
குணசேகரன் கூறுகையில், மீன்பிடி வலைகளை இங்கு தான் பாதுகாப்பு இன்றி போட்டு வைத்துள்ளோம். அதை படகில் ஏற்ற 7 அல்லது 8 பேர் தேவைப்படும். இதனால் கரையோரம் வைத்து விடுகிறோம். அங்கேயே குடில் அமைத்து கண்காணித்து வருகிறோம். மழைக்காலங்களில் உப்பனாற்றில் தண்ணீர் வந்தால், கரையை தாண்டி பல அடி தூரத்திற்கு தண்ணீர் வந்து விடும். நாங்கள் வலை, படகுகளை பாதுகாக்க போட்டுள்ள குடிலும் வீணாகி விடும். ஆகவே எங்களுக்கு படகு துறை அமைத்து கொடுத்தால் நல்லது. அதற்கு முன்பு நாங்கள் எளிதில் மீன்பிடிக்க சென்று வர உப்பனாற்றை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றார்.