மலைப்பாதையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் மான்கள்
கொடைக்கானல் அருகே, மலைப்பாதையில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் தின்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வத்தலக்குண்டு-கொடைக்கானல் பிரதான மலைப்பாதை வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். இந்தநிலையில் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெருமாள்மலை, பேத்துப்பாறை, அடுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன.
இவற்றை அடுக்கம் ஊராட்சி பணியாளர்கள் சேகரித்து, கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டியயுள்ள பகுதியில் மலைபோல் குவித்து வருகின்றனர். மறுசுழற்சி செய்யப்படாததால் அந்த கழிவுகள் தற்போது டன் கணக்கில் குவிந்து கிடக்கிறது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் துர்நாற்றம் வீசி வருகிறது. அத்துடன் வனப்பகுதியில் வசிக்கும் குரங்கு, பன்றிகள், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளையும், கழிவுகளையும் தின்று வருகின்றன. இதையடுத்து வனப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெருமாள்மலை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை 3 மான்கள் தின்று கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக சென்ற சிலர், மான்கள் குப்பைகளை தின்னும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை வனவிலங்குகள் தின்று வருவதால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும், வனத்துறையினர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்குகள் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.