பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான்களைவேட்டையாடிய 4 பேர் கைது


பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான்களைவேட்டையாடிய 4 பேர் கைது
x

பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான்களை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து மான்களை வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

சுருக்கு கம்பி வைத்தனர்

பவானிசாகர் வனச்சரக அலுவலர் செ.சிவக்குமார் தலைமையில் நேற்று கொத்தமங்கலம் பிரிவு வனவர் எல்.கர்ணன், கொத்தமங்கலம் காவல் சுற்று வனக்காப்பாளர் கி.சதீஷ்குமார், வனக்காவலர் ஆர்.மாதையன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர் கொண்ட குழுவினர் கொத்தமங்கலம் இந்திரா நகர் அருகே உள்ள வரப்பள்ளம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 4 பேர் சுருக்கு கம்பி மூலம் கண்ணிகள் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். வனத்துறையினரை பார்த்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

புள்ளிமான் வேட்டை

விசாரணையில் அவர்கள் பவானிசாகர் பங்கீடு துறை ரோடு குடில் நகரை சேர்ந்த நஞ்சப்பன் மகன் ஓதிச்சாமி (வயது 58), புதுபீர்க்கடவு கிராமம் பூதிகுப்பத்தை சேர்ந்த சிவசாமி மகன் கார்த்திக் (27), பவானிசாகர் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்த முருகேசன் மகன் சுபாஷ் (30), சிறுவன் ஒருவன் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் வரப்பள்ளம் வனப்பகுதியில் கடந்த 10-ந் தேதி சுருக்கு கம்பியில் கண்ணி கட்டி வைத்து சென்றதும், மறுநாள் சென்றுபார்த்தபோது சுருக்கு கம்பியில் சிக்கி இறந்து கிடந்த புள்ளிமானை அங்கேயே வெட்டி விற்பனைக்காக இறைச்சியை பிரித்துக்கொண்டதும், அதன்பின்னர் மீண்டும் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பதற்காக அதே பகுதிக்கு சென்று சுருக்கு கம்பியில் கண்ணி கட்டிக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதைத்தொடர்ந்து புள்ளிமானை வேட்டையாடியதாக 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்தப்பட்ட ஒரு கத்தி, 10 சுருக்கு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஓதிச்சாமி ஏற்கனவே புள்ளிமானை வேட்டையாடிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story