கடலில் விழுந்து தத்தளித்த மான்


கடலில் விழுந்து தத்தளித்த மான்
x

கோடியக்கரையில் நாய்கள் துரத்தியதால் கடலில் விழுந்து தத்தளித்த மானை வனத்துறையினர் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில் நாய்கள் துரத்தியதால் கடலில் விழுந்து தத்தளித்த மானை வனத்துறையினர் 1 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

வனவிலங்கு சரணாலயம்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2000-க்கும் மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான்கள் உள்ளன. இந்த பசுமை மாறா காட்டில் சுதந்திரமாக சுற்றித்திரியும் இந்த மான்களை பார்ப்பதற்காக நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கோடியக்கரை சித்தர் கட்டம் அருகில் ஒரு பெண் புள்ளிமான் மேய்ந்து கொண்டு இருந்தது.

கடலில் தத்தளித்த மான்

அப்போது அங்கு இருந்த நாய்கள் மானை துரத்தி உள்ளது. இதனால் அந்த மான், அங்கிருந்து ஓடி கடலுக்குள் சென்று தத்தளித்தது.

கடலில் மான் தத்தளித்து கொண்டிருந்தததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

1 மணி நேரம் போராடி மீட்பு

இதையடுத்து மீனவர் ஒருவரின் படகை எடுத்து சென்று மீனவர்கள் உதவியுடன் 1 மணிநேரம் போராடி கடலில் தத்தளித்த மானை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வனப்பகுதியில் விட்டனர்.கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிய மானை உடனடியாக மீட்ட வனத்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Next Story