அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு


அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு
x

சொத்து பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14-ந்தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில், அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அண்ணாமலை பதில்

இதேபோன்று, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் தரப்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் அனுப்பினார். அதில், 'மன்னிப்பு, இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. தான் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் உள்ளன. எந்த நடவடிக்கை என்றாலும் சட்டப்படி சந்திக்க தயார்' என கூறியிருந்தார்.

அவதூறு வழக்கு

இந்தநிலையில் அண்ணாமலை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசின் சார்பில் சென்னை மாநகர முதன்மை குற்றவியல் அரசு வக்கீல் தேவராஜன், இந்த வழக்கை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நற்பெயர் உள்ளது.

தண்டிக்க வேண்டும்

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதல்-அமைச்சருக்கு எதிராக அண்ணாமலை அவதூறு கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலையை அவதூறு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த மனு, விடுமுறை கால நீதிபதியான கூடுதல் நீதிபதி உமாமகேஸ்வரி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆவணங்களை சரிபார்த்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சம்பந்தமாக உரிய முடிவெடுக்க மனு மீதான விசாரணையை 2 மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story