அவதூறு பேச்சு தொடர்பான வழக்கு: ஈரோடு கோர்ட்டில் சீமான் ஆஜர்
அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் ஈரோடு கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் அவதூறாக பேசியதாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சீமான் நேரில் ஆஜர்
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக, ஈரோடு மாவட்ட முதன்மை கோர்ட்டில் நேற்று ஆஜராகும்படி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு ஈரோடு முதன்மை கோர்ட்டில் சீமான் நேரில் ஆஜரானார். அவருடைய வருகையை சரிபார்த்து, நீதிபதி மாலதி வழக்கு விசாரணைக்காக மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மேல் வந்து ஆஜராகும்படி உத்தரவிட்டார். அதன்படி சீமான் மீண்டும் 2.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜரானார்.
மேலும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு அளிக்கப்பட்ட மனுவில், புகார்தாரரான பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஆஜராகாததால், சீமான் தரப்பில் அளித்த ஜாமீன் மனுக்கான பிணை உத்தரவாத மனுவை நீதிபதி பெற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிபதி வழக்கை விசாரித்து, மீண்டும் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆஜராக சீமானுக்கு உத்தரவிட்டார்.