அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு பேச்சு:சசிகலாபுஷ்பா மீது வழக்கு


தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறு பேசிய பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறித்து அவதூறாக பேசியதாக பா.ஜனதா கட்சி மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த 21-ந் தேதி தூத்துக்குடியில் நடந்தது. இந்த விழாவில் பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை மிரட்டும் வகையிலும், அவதூறாகவும் பேசினாராம்.

வழக்கு

இது குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன் என்பவர் தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா, பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா மீது 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்தல்), 505 (2) (தேவையற்ற கருத்துக்களை பேசி பீதியை ஏற்படுத்துதல்), 506 (1) (கொலை மிரட்டல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story