சேவை குறைபாடு:வங்கிக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக வங்கிக்கு ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
நாகர்கோவில்:
திருவிதாங்கோடை சேர்ந்தவர் கில்லஸ். இவர் அங்குள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். வங்கியில் அதிகாரி கேட்டுக் கொண்டபடி ரூ.25 ஆயிரம் வீதம் 48 தவணைகளில் செலுத்தி முடிக்கும் டெபாசிட் திட்டத்தில் சேர்ந்துள்ளார். இதற்கு 6.85 சதவீதம் வட்டி கிடைக்கும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சில தவணைகள் செலுத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து கில்லஸ் வங்கிக்கு சென்று கடைசி தவணையை செலுத்த முயன்றார். ஆனால் அப்போது தவணையை செலுத்த முடியாது எனவும், கணக்கு முடிக்கப்பட்டு லாக்அவுட் செய்யப்பட்டதாகவும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் முதிர்வுத் தொகையை விட குறைவான தொகை தான் கிடைக்கும் என்றும் கூறினர். இதனால் கில்லஸ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நுகர்வோர் அமைப்பு மூலம் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் வங்கியின் சேவை குறைப்பாட்டை சுட்டிக் காட்டி ரூ.72,381 அபராதம் விதித்தனர். இந்த தொகையை 6 சதவீத வட்டியுடன் வழக்கு தொடர்ந்த நாள் முதல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரத்தையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
----------