பாழாகும் இயற்கை வளம்; பறிபோகும் சிற்றோடைகள்:கேரளாவின் குப்பைத்தொட்டியாக தமிழக வனப்பகுதிகள் மாறுகிறதா?தடுப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வனம் என்பது தூய காற்றை உற்பத்தி செய்யும் மாபெரும் தொழிற்சாலை. அருவிகளின் பிறப்பிடம். மழைகளின் ஆதாரம். பல்லுயிர்களின் வாழ்விடம்.
வனப்பாதுகாப்பு
வனம் வளமாக இருந்தால் வனத்தில் உள்ள உயிர்களும், வனத்தை கடந்துள்ள நகர், கிராமங்களில் உள்ள மக்களும் வளமாக இருப்பார்கள். வனத்தின் வளமானது அங்கிருக்கும் வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தை மட்டும் இன்றி, ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கிறது. அதற்காக தான் உலகம் முழுவதுமே வனத்தை பாதுகாக்க தொடர் முயற்சிகள், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வன வளத்தை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. வனத்தை காக்கும் துறையான வனத்துறைக்கு இது அதிகமாகவே உள்ளது. ஆனால் வளத்தை பாதுகாக்க யார்? எவ்வளவு கடமையாற்றுகிறார்கள், பொறுப்பில் இருந்து தவறுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காலம் வெளிப்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் வளமாய் மழை பெய்தது, இப்போது வறட்சி நிலை கொண்டுள்ளது என்றால் அதற்கு வனவளம் பறிபோவதும் முக்கிய காரணம்.
கம்பம்மெட்டு
தமிழக வனப்பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்றால் ஒரு கேள்விக்குறியை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய நிலைமை தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதிகளில் திகழ்கிறது. தேனி மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை, போடிமெட்டு ஆகிய மலைப்பாதைகள் தமிழக-கேரள மாநில போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. இதில் கம்பம்மெட்டு மலைப்பாதை என்பது கேரளாவின் குப்பைத் தொட்டியாக மாறிவருகிறதா? என்ற கேள்வி இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு சாலையின் இருபுறமும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.
கம்பம்மெட்டு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கேரள மாநில பகுதிகளில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து மலைப்பாதையில் கொட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த மலைப்பாதையில் குப்பைகள் கொட்டுவதால் வனவளம் பாதிக்கப்படுகிறது.
இயற்கை வளத்துக்கு கேடு
வனப்பகுதியில் மரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஆங்காங்கே உள்ள சிற்றோடைகளும் முக்கியம். அதுபோன்ற சிற்றோடைகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. அவற்றில் இயற்கை வளத்துக்கு கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.
மழை பெய்யும் போது அவை நீரோடைகளில் அடைப்பை ஏற்படுத்துவதோடு, மண்ணில் புதைந்து வன வளத்தையும் பாதிக்கச் செய்கிறது. குப்பைகளில் வன விலங்குகள் இரைதேடுவதால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனப்பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதுபோல், கம்பம்மெட்டு மலைச்சாலை சேதம் அடைந்து விபத்து அபாயத்துடன் காட்சி அளிக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
விபத்தில் சிக்கும் குரங்குகள்
கம்பத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சித்தேந்திரன் கூறும்போது, 'கம்பம்மெட்டு மலைப்பாதை இருமாநில போக்குவரத்துக்கு முக்கியமான மலைப்பாதை ஆகும். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை கால கட்டத்தில் வாகனங்கள் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படும். அப்போது வாகனங்கள் அனைத்தும் கம்பம்மெட்டு வழியாக தான் இயக்கப்படும். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்கு கூலித்தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஆயிரக்கணக்கான ஜீப்கள் இந்த சாலையில் தான் சென்று வருகின்றன.
இந்த மலைப்பாதையில் குப்பைகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும். சில நேரங்களில் மருத்துவ கழிவுகளும் கொட்டப்படுகின்றன. அதுபோன்ற நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையில் பயணம் செய்பவர்கள் அங்கு உலா வரும் குரங்குகளுக்கு உணவுப் பொருட்களை சாலையில் வீசிச் செல்கின்றனர். அதனை குரங்குகள் போட்டிப் போட்டு சாப்பிடும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே குரங்குகள் இயற்கையாக வனப்பகுதியில் இரைதேடிக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.
காட்டில் வளம் இல்லையா?
கம்பத்தை சேர்ந்த சபீக்ராஜா கூறும்போது, 'மலைப்பாதையில் குப்பைகள் கொட்டுவது பல்லுயிர்களுக்கு பாதிப்பை கொடுக்கும். எல்லையில் சோதனை சாவடிகள் இருந்தும், குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என்றால், சோதனை சாவடியில் கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தற்போது மலைப்பாதையில் கிடக்கும் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டதால், கண்காணிப்பு சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து குப்பைகள் கொட்டியவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும். அதுபோல், குரங்குகள் சாலைகளில் உணவுக்காக காத்திருப்பதை பார்க்கும் போது காட்டில் வளம் இல்லையா? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சாலையில் செல்பவர்கள் உணவுகளை கொடுத்து குரங்குகளை சோம்பேறியாக்க வேண்டாம். சாலை சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்' என்றார்.
நிரந்தர தீர்வு
கம்பத்தை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ராஜேந்திரன் கூறும்போது, 'கம்பம்மெட்டு மலைப்பாதையில் அடிக்கடி சென்று வருகிறேன். இந்த மலைப்பாதையில் கொஞ்சம் தூரம் பயணம் செய்தாலே குளிர்ச்சியான சூழலை உணர முடியும். அந்த அளவுக்கு வளமான வனப்பகுதி. இங்கு குப்பைகளை கொட்டுவதால் வன வளம் பாதிக்கப்படுகிறது. வன வளத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் இருக்கிறது. எனவே, யாரோ சிலர் செய்யும் தவறுகள் வன விலங்குகள், நீரோடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.