பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வாங்க தாமதம்:ரேஷன் கடைகளில் கருவிழி எந்திரம் மூலம் பதிவு செய்ய கோரிக்கை
பயோமெட்ரிக் முறையால் பொருட்கள் வாங்க தாமதம் ஆவதால் ரேஷன் கடைகளில் கருவிழி எந்திரம் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கம்பத்தில் 3 மகளிர் ரேஷன்கடை உள்பட 21 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 25 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கார்டுகள் முன்னுரிமை குடும்பம் (பி.எச்.எச்.), அந்த்யோதயா (ஏ.ஏ.ஒய்.), முன்னுரிமை இல்லாதவர்கள் (என்.பி.எச்.எச்.) என பிரிக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அரிசியை தனித்தனியாக பிரித்து ரசீது போட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கடைகளில் அரிசி வாங்க செல்லும் பி.எச்.எச். கார்டுதாரர்கள் 2 முறை கை ரேகை வைத்து தனி, தனியாக அரிசி வாங்கி வருகின்றனர். ஆனால் மற்ற வகை ரேஷன் கார்டுதாரர்கள் ஒரு முறை கைரேகை பதிவு செய்து அரிசி பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிலருக்கு பல முறை கைரேகை வைத்தால் மட்டுமே கைரேகை பதிவாகின்றன. இந்நிலையில் புதிய திட்டத்தால் (பாயின்ட் ஆப் சேல்ஸ் எந்திரம்) கைரேகை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்துகிடக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே ரேஷன் கடைகளில் கைரேகை பயோமெட்ரிக் முறைக்கு பதிலாக கருவிழி பதிவு செய்து அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.