மின்மீட்டர்கள் பற்றாக்குறையால் புதிய இணைப்புக்கு தாமதம்


மின்மீட்டர்கள் பற்றாக்குறையால் புதிய இணைப்புக்கு தாமதம்
x
தினத்தந்தி 7 Sept 2023 6:15 AM IST (Updated: 7 Sept 2023 6:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி தாலுகாவில் மின்மீட்டர்கள் பற்றாக்குறையால் புதிய இணைப்புக்கு தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

தேனி

ஆண்டிப்பட்டி தாலுகாவில் ஆண்டிப்பட்டி, வைகை அணை, கண்டமனூர், கடமலைக்குண்டு ஆகிய பகுதிகளில் துணை மின்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையங்களில் இருந்து வீடுகளுக்கும், விவசாய பயன்பாட்டிற்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டிப்பட்டி தாலுகாவில் புதிதாக கட்டப்படும் கட்டிங்களுக்கு மின்சார இணைப்பு கேட்டு துணை மின்சார நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பம் செய்த மக்களுக்கு மின்சார வாரியம் சார்பில் மின்மீட்டருடன் மின்சார இணைப்பு வழங்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை விண்ணப்பித்த சில நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிய இணைப்புகளுக்கு பொருத்தப்படும் மின்மீட்டர்கள் பற்றாக்குறையால், புதிய இணைப்புகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதன்காரணமாக ஆண்டிப்பட்டி தாலுகாவில் புதிய மின் இணைப்பு கேட்டு காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. புதிய மின் இணைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மின்சார இணைப்பு கிடைக்காததால் புதிய வீடுகளின் கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்மீட்டர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து புதிய மின்சார இணைப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story