சர்வர் பிரச்சினையால் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதில் தாமதம்
மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் சர்வர் பிரச்சினையால் ஆன்லைனில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதையொட்டி வீடு, வீடாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி நடந்தது. விண்ணப்பங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக தன்னார்வலர்கள் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி கடந்த சில நாட்களாக விண்ணப்பங்களை பதிவு செய்வது தொடர்பான மாதிரி முகாம்கள் நடத்தப்பட்டது.
சர்வர் பிரச்சினை
இந்த நிலையில் நேற்று முதல் கட்டமாக 397 முகாம்களில் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடங்கியது. பதிவு செய்வதற்காக பொதுமக்கள் பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் கொண்டு வந்திருந்தனர்.
பல இடங்களில் நடந்த முகாமில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் தன்னார்வலர்கள் சிரமப்பட்டனர். அதைத்தொடர்ந்து பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் நடந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். மேலும் அந்தப்பிரச்சினை குறித்து தன்னார்வலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியின்போது சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. அதற்கு மாற்றாக குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை ஆப்லைனில் சேகரித்து பின்னர் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆப்லைன் நடைமுறையிலும் பதிவு செய்வதில் பல தன்னார்வலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அவர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் இருப்பதற்காக அவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும், ஆவணங்களின் நகல்களையும் பெற்று வைத்துள்ளோம். சர்வர் பிரச்சினை சரியான பின்னர் அந்த விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என்றனர்.