விழுப்புரம் அரசு கல்லூரி நுழைவுவாயில் கதவு திறப்பதில் காலதாமதம்வெகுநேரம் காத்திருக்கும் மாணவர்கள்
விழுப்புரம் அரசு கல்லூரில் நுழைவு வாயில் கதவை திறக்க காலதாமதம் ஆவதால் மாணவர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக காலை வேளையில் கல்லூரி திறப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் மாணவர்கள் வெகுநேரம் கல்லூரி முன்பாக சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. நேற்று காலை 9 மணி ஆகியும் கல்லூரியின் நுழைவுவாயில் கதவுகள் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் அங்குள்ள சாலைகளிலும், கல்லூரியின் அருகில் இருக்கும் வீட்டுவாசல்களிலும் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தனர். கல்லூரி பிரதான சாலையில் மாணவ, மாணவிகள் காத்திருப்பதால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வரும் வரை, நுழைவுவாயில் இரும்பு கதவுகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே இக்கல்லூரியில் நடந்த மாணவர் சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான நிலையில் தற்போது கல்லூரியின் நுழைவுவாயில் கதவை உரிய நேரத்தில் திறக்காமல் அடைத்து மாணவர்களை வெகுநேரம் காக்க வைத்துள்ள கல்லூரி நிர்வாகத்தின் செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் மாணவ- மாணவிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் உரிய நேரத்தில் கல்லூரியின் நுழைவுவாயில் கதவை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ- மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.