சிகிச்சை அளிக்க தாமதம்: ஆஸ்பத்திரியில் கண்ணாடியை உடைத்த அரசு ஊழியர்


சிகிச்சை அளிக்க தாமதம்: ஆஸ்பத்திரியில் கண்ணாடியை உடைத்த அரசு ஊழியர்
x

சிகிச்சை அளிக்க தாமதம் ஆவதாக கூறி நெல்லை ஆஸ்பத்திரியில் அரசு ஊழியர் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். தினமும் காரில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். செங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை அளிக்க தாமதம் ஆவதாக கூறி தகராறு செய்து, அங்குள்ள அறையின் கண்ணாடி கதவை உடைத்தார். இதைக்கண்ட டாக்டர் மற்றும் ஊழியர்கள் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசு ஊழியரான அவரை சமாதானப்படுத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story