தூத்துக்குடி அருகே 2,117 ஏக்கர் நில மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி அருகே 2,117 ஏக்கர் நில மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே முறைகேடாக 2 ஆயிரத்து 117 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கிராம மக்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் மனு கொடுத்து உள்ளனர்.
மோசடி பதிவு
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சுமார் 500 விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் குளம், வாய்க்கால், சாலை பாதைகள், மயானம், புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் மோசடியாக தனிநபர் ஒருவரது பெயருக்கு புதுக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 18.04.2022 அன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து புதுக்கோட்டை சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், மோசடியாக நடைபெற்ற பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனால், வில்லங்க சான்றிதழில் மோசடி பத்திரப்பதிவு குறித்த குறிப்பு இடம் பெற்று உள்ளது. வில்லங்க சான்றிதழில் மோசடி பதிவு குறித்த குறிப்பை முழுமையாக நீக்க வேண்டும். மேலும், இந்த மோசடி பதிவுக்கு காரணமான அனைவரது மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
அரசு வேலை மோசடி
தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளையை சேர்ந்த ஜான்செல்வம் (வயது 32) உள்பட 7 பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவர் எங்களிடம் ரெயில்வே, பொதுப்பணித்துறையில் வேலைவாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பி நாங்கள் 7 பேரும் மொத்தம் ரூ.65 லட்சம் கொடுத்து உள்ளோம். ஆனால் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. தற்போது அவர் தலைமறைவாகிவிட்டார். எனவே, எங்களிடம் மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.