வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை
வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில்
அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் உள்ளது. இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் கோவில் அருகே உள்ள குடகனாற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த ஆற்றைக் கடக்க தரைமட்ட பாலம் வழியாகச்செல்ல வேண்டும். இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் வரும்போது சிறிய தரைமட்ட பாலத்தில் தண்ணீர் வழிந்தோடும். அந்த நேரத்தில் பொதுமக்கள் வெஞ்சமாங்கூடலூர் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்ல மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தரைமட்ட பாலம்
இதேபோல் வெஞ்சமாங்கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை அரவக்குறிச்சி மற்றும் கரூருக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால், இந்த சிறிய தரைமட்ட பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. குடகனாற்றில் தண்ணீர் வரும் போது இப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல வேண்டுமென்றால் வெஞ்சமாங்கூடலூரில் இருந்து ஆத்துமேடு சென்று பிறகு அரவக்குறிச்சி செல்ல வேண்டும்.
எனவே வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் சிரமம்
வெஞ்சமாங்கூடலூர் புளியம்பட்டியை சேர்ந்த நதியழகன்:- அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூரில் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் வழிபட வருவார்கள். இக்கோவிலுக்கு செல்ல வேண்டுமென்றால் அரவக்குறிச்சியில் இருந்து தேரப்பாடி வழியாக வெஞ்சமாங்கூடலூர் செல்ல வேண்டும். வெஞ்சமாங்கூடலூருக்கு முன்பு குடகனாறு உள்ளது. இந்த ஆற்றில் உள்ள சிறிய தரைமட்டபாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் தரை பாலத்தின் வழியாக செல்ல முடியாது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மலைக்கோவிலூர்- அரவக்குறிச்சி செல்ல வேண்டுமானால் இந்த தரைமட்ட பாலத்தின் வழியாகத் தான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வரும்போது இவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர் மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்
அரவக்குறிச்சியை சேர்ந்த மாயவன்:- அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிமக்கள் வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம். இதற்காக குடகனாற்றில் தரைமட்ட பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆற்றில் தண்ணீர் வரும்போது வெஞ்சமாங்கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து யாரும் அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை. அதேபோல் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் யாரும் வெஞ்சமாங்கூடலூர் செல்ல முடிவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவலம்
ஆத்துமேட்டை சேர்ந்த சாதிக்:- வெஞ்சமாங்கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழும் பகுதியாகும். இப்பகுதியில் முருங்கைக்காய் மண்டி உள்ளது. இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்புக்காக மற்றும் மருத்துவமனைக்கு செல்ல அரவக்குறிச்சி மலைக்கோவிலூர் பள்ளப்பட்டி செல்ல வேண்டுமானால் வெஞ்சமாங்கூடலூர் தரைமட்ட பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் இப்பகுதி மக்களாகிய நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். குறிப்பாக இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமானால் ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெஞ்சமாங்கூடலூர் குடகனாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷ ஜந்துகள் நடமாட்டம்
ஆத்துமேட்டை சேர்ந்த கோபி:- வெஞ்சமாங்கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் குறிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமானால் குடகனாற்றில் தரைமட்ட பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இரவு நேரங்களில் இந்த பாலம் வழியாக செல்லும் போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாடுகின்றன. இதனால் பொதுமக்கள் பயந்து தான் செல்ல வேண்டி உள்ளது. குறிப்பாக ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் இப்பகுதி மக்களாகிய எங்களின் கதி அதோகதி தான். எனவே இந்த ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.