தமிழக-கேரள எல்லையில் சாக்குலூத்துமெட்டு சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை


தமிழக-கேரள எல்லையில் சாக்குலூத்துமெட்டு சாலை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2023 1:00 AM IST (Updated: 23 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையில் சாக்குலூத்துமெட்டு சாலையை முடிக்க வேண்டும் என்று 25 கிராம மக்களின் கூட்டுக்குழுவினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம், தேவாரம் சாக்குலூத்து மெட்டு சாலை அமைப்புக்கான 25 கிராம மக்களின் கூட்டுக்குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் தேவாரம், கம்பம், போடி பகுதிகளில் இருந்து சுமார் 6 ஆயிரம் பேர் கேரள மாநிலம் உடும்பன்சோலை, நெடுங்கண்டம் பகுதிக்கு தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும் அங்கு தமிழகத்தை சேர்ந்த சிறு, குறு தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் கேரளாவுக்கு செல்ல கம்பம்மெட்டு சாலை வழியாக 70 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றனர். போடிமெட்டு சாலை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றனர். ஆனால் தேவாரத்தில் இருந்து சாக்குலூத்து மெட்டு சாலை வழியாக 20 கிலோ மீட்டர் பயணித்தாலே நெடுங்கண்டம் சென்றுவிடலாம்.

இதனால் தமிழக-கேரள எல்லையில் சாக்குலூத்து மெட்டு சாலைக்கு கடந்த 1981-ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் குழந்தைவேல் அடிக்கல் நாட்டினார். 2004-ம் ஆண்டு 6.6 கிலோ மீட்டர் வரை மட்டுமே சாலை அமைக்கப்பட்டுள்ளது. தேவாரம் முதல் சாக்குலூத்து மெட்டு வரை 20 கிலோ மீட்டர் சாலையில், மலைப்பாதை என்பது 3 கிலோ மீட்டர் மட்டுமே உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து அமைத்துக்கொடுத்தால் தமிழக தொழிலாளர்கள் மிகுந்த பயனடைவார்கள். எனவே சாக்குலூத்து மெட்டு சாலையை விரைந்து அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில், அவர்கள் கூறியிருந்தனர். இதேபோல், தேனி எம்.பி. ப.ரவீந்திரநாத்திடமும் இந்த மக்கள் கூட்டுக்குழுவினர் இதுதொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர்.


Next Story