வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை
அட்மா திட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பிரதீப் சாமுயேல் டெனிசன், மாநில செயலாளர் ஈழவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், வேளாண் மற்றும் உழவர் மகன் தொழில் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் அட்மா திட்ட பணியாளர்களில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவோம் என்று தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்தார், அதன் அடிப்படையில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மேலும் இத்திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், மகப்பேறு காலங்களில் விடுப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.